ராஜ்நாத் சிங் – ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை

சீனாவின் கிங்டாவோ நகரில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஓரமாக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கல், சுகோய்-30 போர் விமானங்களின் செயல்திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், புவிசார் அரசியல் சூழ்நிலை, எல்லை தாண்டும் தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றியும் உரையாடப்பட்டது.

ரஷ்யா, இந்தியாவுடன் உள்ள உறவுகள் வலுவானவை என தெரிவித்த பெலோசோவ், ஏப்ரல் 22-ல் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் முக்கியத்துவம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் தேவை போன்றவை குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.

மேலும், பெலாரஸ், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, ராணுவ பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், ராணுவக் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

Facebook Comments Box