இந்தியா எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்தைத் தவிர்த்தது – வெளியீடு இல்லை

இந்தியா எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்தைத் தவிர்த்தது – வெளியீடு இல்லை

2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சமீபத்தில் சீனாவின் குயிங்தவோ நகரில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

மாநாட்டின் இறுதியில் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த ரயில் கடத்தல் சம்பவம் குறிப்பிடப்பட்டாலும், ஜம்மு காஷ்மீரில் ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. இதை எதிர்த்து, இந்தியா கையெழுத்திட மறுத்தது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.

மேலும், இந்தியா சார்பில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரை அமைச்சர் ராஜ்நாத் சிங் முழுமையாக புறக்கணித்தார். அவர் எந்த சந்திப்பிலும் பாகிஸ்தான் அமைச்சருடன் உரையாடவில்லை.

மாநாட்டில் பேசும் போது, ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் தீவிரவாதத்தை ஆதரிக்கின்ற நாடுகளை கடுமையாக விமர்சித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும், இந்தியா எந்தநேரமும் தீவிரவாதத்தை சகிக்காது என்றும் கூறினார்.

மாநாட்டின் போது இந்தியா–ரஷ்யா உறவு வலுவானதாக காணப்பட்டது. இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் தனிப்பட்ட சந்திப்பில் கலந்துரையாடினர். ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், இந்தியாவை ரஷ்யாவின் நம்பகமான நட்பு நாடு என புகழ்ந்தார்.

மேலும், சீனாவின் நிங்போவில் நடந்த எஸ்சிஓ எரிசக்தி அமைச்சர்களின் மாநாட்டில், மரபுசாரா எரிசக்தி குறித்து விவாதங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் மற்றும் ஈரான் அமைச்சர்கள் சீனாவை நெருங்கிய நட்புநாடு என புகழ்ந்தனர்.

Facebook Comments Box