புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவது கட்டாயமாகும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தையும் (ஏபிஎஸ்) கட்டாயமாக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளை அமல்படுத்துவதற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: இந்த மாற்றங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியான பின்னர் 3 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும். வாகன ஓட்டுநர் மற்றும் பின்சாரி பயணிக்கும் நபரின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
வழங்கப்படும் ஹெல்மெட்கள் இந்திய தரநிலை அமைப்பான பிஐஎஸ் (BIS) தரச்சான்று பெற்றவை ஆக இருக்க வேண்டும். ஹெல்மெட் விதிக்குடன் கூடுதலாக, 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், 50 சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் அல்லது மணிநேரத்துக்கு 50 கி.மீ.-ஐ மிஞ்சும் வேக திறனைக் கொண்ட எல்2 வகை இருசக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. இது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி, வழுக்கி விபத்துக்கு உள்ளாகும் சாத்தியத்தை குறைக்கும்.
இந்த புதிய விதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் எதிர்ப்புகளை comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இதற்காக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.