சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவடைந்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.2,440 குறைந்து, நேற்று ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனையானது.
உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. இடையிடையே விலை சிறிது குறைந்தாலும், யுத்தப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிக மட்டத்தில் நிலைத்துள்ளது.
கடந்த 14ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்ற அளவுக்கு சென்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்பின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், கடந்த 23ம் தேதி முதல் தொடர்ந்து குறைவடைந்து வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனையானது. இதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனையானது. 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ.77,936 ஆக இருந்தது.
கடந்த 22ம் தேதி பவுன் ரூ.73,880-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.71,440-க்கு விற்பனையானது. இதனால், இந்த வாரத்தில் மட்டும் ரூ.2,440 குறைவடைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை விரும்புபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்த நிலையில், கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி பார் ரூ.1,000 குறைந்து ரூ.1,20,000-ஆகவும் விற்பனையானது.