அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 44 பேர் பாதிப்பு

அசாமின் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபகாலமாக ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. 2025ம் ஆண்டுக்குள் இந்நோயால் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மேற்பார்வையாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா கூறியதாவது:

“நமது மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டால், பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 44 பேருக்கு இந்த நோய் உறுதியாகியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.”

பாதிக்கப்பட்ட 44 பேரில், கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 14 பேர், நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர், தர்ரங்கிலிருந்து 7 பேர் மற்றும் கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகள் படி, 2015 முதல் 2024 வரையிலான காலத்தில் அசாமில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 840-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது முக்கியமான விஷயம்.


ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?

ஜப்பானிய மூளைக்காய்ச்சலை (Japanese Encephalitis – JE) ஏற்படுத்தும் வைரஸ், ‘க்யூலெக்ஸ்’ வகை கொசுக்கள், பன்றிகள் மற்றும் சில பறவைகளில் வாழக்கூடியது. இது பெரும்பாலும் விவசாயம் நடைபெறும் கிராமப்புறங்களில் காணப்படுகிறது. காரணம், க்யூலெக்ஸ் கொசுக்கள் வயல்வெளிகள், கிணறுகள் மற்றும் பன்றிகள் வாழும் இடங்களில் பெரும்பாலும் கிடைக்கும்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான கொசு ஒருவரைக் கடித்தால், அந்த நபருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஏற்படும். மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசு மற்றொரு ஆரோக்கிய நபரைக் கடித்தால் அவருக்கும் நோய் பரவலாம். இருப்பினும், மனிதர் மாறி மனிதருக்கு நேரடியாக இந்த நோய் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box