டென்னிசின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக முக்கியமான மற்றும் மரியாதைக்குரியதாக அறியப்படும் விம்பிள்டன் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், 12-வது நிலை அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோ, 117-வது நிலை டென்மார்க் வீரர் எல்மர் மோலர் எதிராக களமிறங்கினார். இதில் தியாஃபோ 6-3, 6-4, 6-2 என்ற நேரடி செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
9-வது நிலை ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ், 6-வது நிலை பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சியுடன் மோதினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தில், பெஞ்சமின் போன்சி 7-6 (7-2), 3-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மேத்வதேவை தோற்கடித்தார்.
24-வது நிலை அர்ஜெண்டினா வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ், 113-வது நிலை பிரான்ஸ் வீரர் வாலண்டைன் ராயர் எதிராக மோதினார். 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த சிட்சிபாஸ், காயம் காரணமாக போட்டியை முடிக்காமல் விலகினார். இதனால் வாலண்டைன் ராயருக்கு வெற்றி வழங்கப்பட்டது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், நம்பர் 1 வீராங்கனை பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 194-வது நிலை கனடா வீராங்கனை கார்சன் பிரான்ஸ்டைன்-ஐ எதிர்த்து ஆடினார். இதில் சபலெங்கா 6-1, 7-5 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.
14-வது நிலை உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினா, 75-வது நிலை ஹங்கேரி வீராங்கனை அனா போன்டாவிடம் 6-3, 6-1 என்ற நேரடி செட் கணக்கில் வென்றார்.
20-வது நிலை வீராங்கனை ஜெலினா ஒஸ்டபென்கோ, 51-வது நிலை இங்கிலாந்து வீராங்கனை சோனே கர்தாவிடம் 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
இருமுறை விம்பிள்டன் இறுதி சுற்றுக்குள் சென்ற துனிசிய வீராங்கனை ஜபூர், பல்கேரியா வீராங்கனை விக்டோரியா டோமோவாவுடன் மோதினார். 6-7 (5-7), 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்த ஜபூர், எதிர்பாராதவிதமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால், விக்டோரியா டோமோவாவுக்கு வெற்றி வழங்கப்பட்டது.