சர்வதேச விண்வெளி மையத்தில் நடத்திய ஆய்வுகளை முடித்த இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு, தற்போது டிராகன் விண்கலத்தில் அமெரிக்காவின் ஃபல்கான் 9 ராக்கெட் உதவியுடன் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இந்த விண்வெளிப் பயண திட்டம் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்க விண்வெளி ஆய்வகம் நாசா, இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகிய அமைப்புகளின் கூட்டுச் செயல்பாடாக நடைபெற்றது. இக்கூட்டமைப்பின் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலமாக, கடந்த ஜூன் 25ஆம் தேதி நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையம் நோக்கி அனுப்பப்பட்டனர்.
இந்த குழுவில் இந்தியாவின் ஷுபன்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா சார்ந்த பெக்கி விட்சன் (தலைவர்), போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோரும் இருந்தனர். இவர்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டு, 28 மணி நேர பயணத்திற்கு பிறகு ஜூன் 26ஆம் தேதி மாலை சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு 18 நாட்கள் தங்கியிருக்கும் காலத்தில் பல்வேறு விஞ்ஞானப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளை இக்குழு மேற்கொண்டது. ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இந்நால்வரும் இன்று இந்திய நேரப்படி மாலை 4.45 மணிக்கு டிராகன் விண்கலத்தின் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.