இளையோர் போதை விலகும் நோக்கத்தில் வாராணசியில் 3 நாள் ஆன்மிக மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தகவல்

நாட்டின் இளையவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, ஆன்மிக ஒழுக்கத்தில் உறுதி பெறும் நோக்கில், வருகிற ஜூலை 18ம் தேதி முதல் வாராணசியில் 3 நாள் இளையோர் ஆன்மிக உச்சிமாநாடு நடைபெறவுள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:

“நமது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றைய இளைய தலைமுறையினரே முதன்மை ஊக்க சக்தியாக உள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதிற்குள் உள்ளவர்கள். சராசரியாக ஒரு இந்தியரின் வயது 28 ஆகும். இது இந்திய இளைய சமூகத்துக்கு அபாரமான பொறுப்பும் வாய்ப்பும் அளிக்கிறது.

இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு இலக்காகும். இந்தக் கனவை வெறும் பார்வையாளர்களாகவே இல்லாமல், திட்டமிட்டு செயல்படும் மாற்றதாரர்களாகவும், சமூக மாற்றத்திற்கு வழிகாட்டும் தலைவர்களாகவும் நமது இளைஞர்கள் உருவாக வேண்டும்.

ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள் பழக்கம் இருக்கிறது. வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் அவர்கள் இதன் பிடியில் சிக்கிக்கொள்வது, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்ற பாதைக்கும் தடையாக அமைக்கிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு ஒருங்கிணைந்த தீர்வை வழங்கும் வகையில், மத்திய அரசு பல துறைகளை இணைத்து செயல்பட உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆன்மிக அமைப்புகள் போன்றவற்றுடன் இணைந்து, ஒரு நீண்டகால நோக்கில், சமூகத்தின் பல தரப்பினரையும் உள்ளடக்கிய போதை எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்படுகிறது.

இதற்கான ஒரு முக்கிய கட்டமாக, புனித கங்கை நகரமான வாராணசியில் வரும் ஜூலை 18 முதல் 20ம் தேதி வரை மூன்று நாள் ஆன்மிக இளையோர் உச்சிமாநாடு நடத்தப்படுகிறது. இதில், நாடு முழுவதிலுமுள்ள 100 ஆன்மிக அமைப்புகளின் இளையோர் பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 500 இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும், போதைப்பொருள் பழக்கத்தை வேரோடு ஒழிக்க என்ன வழிகள் எடுத்துக்கொள்ளலாம் என்பதை விவாதிக்க உள்ளனர்.

மாநாட்டின் முதல் நாளான ஜூலை 18ம் தேதி பங்கேற்பாளர்கள் வருகை பதிவு செய்து, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது நாளான ஜூலை 19ம் தேதி மாநாடு தொடங்கும். இதில், போதைப்பொருள் பழக்கத்தை புரிந்துகொள்வது, அதன் பின்புல வணிக சூழ்நிலை, விற்பனை வலைப்பின்னல், இளைஞர்களை அமைப்பாக அணுகும் முறைகள், உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும்.

மூன்றாவது நாள், ஜூலை 20ம் தேதி, போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்கான சாலை வரைபடம் (ரூட்மேப்) இறுதியாக உருவாக்கப்படும். ‘வாராணசி பிரகடனம்’ என்ற பெயரில் முடிவுகள் வெளியிடப்படும். இதை தொடர்ந்து ஊடக சந்திப்பு மற்றும் மாநாட்டின் நிறைவு நிகழ்வுகள் நடைபெறும்” என அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box