கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா மீது விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதென முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒத்திவைப்பிற்கு முக்கிய காரணம், இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்பதாக கூறப்படுகிறது.
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (வயது 38), ஏமன் நாட்டைச் சேர்ந்த ஜவுளித் தொழிலதிபர் தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை ஆரம்பித்திருந்தார். ஆனால், இருவருக்கும் பின்னாளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தலால் மெஹ்திக்கு நிமிஷா மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் விளைவாக மெஹ்தி உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில், நீதிமன்றம் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. அந்த தண்டனை ஜூலை 16 அன்று நிறைவேற்றப்படவுள்ளதாக இருந்தது. இதையடுத்து, இந்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, தண்டனையை நிறைவேற்றுவதைத் தடுக்க பல முயற்சிகளில் ஈடுபட்டது.
இந்த விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாவது, “நிமிஷா பிரியாவிற்கு சட்டப்படி கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கு தொடர்புடைய அனைத்து தரப்புகளுடனும் பரஸ்பர ஒத்துழைப்பு வாய்ந்த தீர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது. இதற்காக இந்திய தூதரகம், ஏமனில் உள்ள சிறை அதிகாரிகள், சட்டத்துறை மற்றும் வழக்கறிஞர்கள் ஆகிய அனைவருடனும் நெருக்கமான தொடர்பு வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த முயற்சிகளின் பலனாகவே தற்போது மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
ஏமனில் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய சட்டத்தின்படி (ஷரியா), “குருதி பணம்” எனப்படும் நிவாரணத் தொகை கொடுப்பதன் மூலம், சில சந்தர்ப்பங்களில் மரண தண்டனையை தவிர்க்க வாய்ப்பு உள்ளது. இந்த விதியின் அடிப்படையில், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர், உயிரிழந்த தலால் மெஹ்தியின் குடும்பத்தினரிடம் ரூ.8.6 கோடி அளவிலான நிவாரணத் தொகையை வழங்க முன்வந்துள்ளனர். ஆனால், அந்த தொகையை மெஹ்தி குடும்பம் ஏற்றுக்கொண்டதா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை.