அமெரிக்காவுக்கான விசா பெற விரும்பும் இந்தியர்களுக்குத் தூதரகத்தின் புதிய எச்சரிக்கை – சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் கைது விவகாரத்தைத் தொடர்ந்து அறிவிப்பு!
அமெரிக்காவின் ஒரு பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் இந்தியா சேர்ந்த பெண் ஒருவர் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்க விரும்பும் இந்திய பிரஜைகளுக்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் புதிய எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய எச்சரிக்கை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் (முந்தைய ட்விட்டர்) தூதரகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது:
“அமெரிக்காவில் நீங்கள் தாக்குதல், திருட்டு அல்லது சட்டத்திற்குப் புறம்பான முறையில் கட்டிடங்களில் நுழைந்து கொள்ளைச் செயல்களில் ஈடுபடுவதை போன்ற குற்றங்கள் செய்வது, கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்ட மீறல்கள் உங்கள் அமெரிக்க விசாவை நிரந்தரமாக ரத்து செய்யக்கூடிய நிலைக்கு தள்ளும். ஒருமுறையாவது இத்தகைய குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், பின்னர் நீங்கள் அமெரிக்காவுக்குள் நுழையவே முடியாமல் தடை செய்யப்படும். அமெரிக்கா தனது சட்டங்களையும் ஒழுங்கினையும் மிகுந்த முக்கியத்துவத்துடன் பாதுகாக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், குடியேற்றம் செய்ய விரும்பும் நபர்களும் இதை மதித்து, அமெரிக்க சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலான வீடியோ மற்றும் அதற்கான பின்னணி:
சமீபத்தில், விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற இந்தியப் பெண் ஒருவர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.1 லட்சம் மதிப்புடைய பொருட்களை ஒரு பெரிய கடையிலிருந்து திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கமெரா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், குறித்த பெண் காவல்துறையால் பிடிபட்டதும், “நான் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க தயாராக இருக்கிறேன். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்” என கூறி வாதிடுவதை காண முடிகிறது. இதற்கு அமெரிக்க போலீஸார் கண்டிப்பாக பதிலளித்து, “கடையில் உள்ளபோதே நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் திருடுவதற்கென்று தீர்மானித்ததற்கே சாட்சியாக இந்த நிலை உள்ளது. தற்போது பணம் கொடுப்பதாக கூறுவதால் உங்கள் குற்றம் தணிக்கப்படாது. அதனால் உங்களை கைது செய்யும் முடிவில் இருந்து நாம் பின்னடைய முடியாது” என்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து நிகழும் தவறுகள்:
இது ஒரே தவறு அல்ல. கடந்த மாதம், ஒரு இந்திய மாணவர் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடந்த முயற்சியினால் பிடிபட்டார். அவரை அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் நாடு கடத்தினர். அதன் பின்னர், இந்த வகை சட்டவிரோத நுழைவுகளைக் குறிவைத்து இந்தியர்களுக்கு விசா எச்சரிக்கை வழங்கப்பட்டது.
இப்போது, திருட்டுச் சம்பவம் தொடர்பாகவும் ஒரே மாதிரியான அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், இந்தியர் எனும் அடையாளத்துடன் வரும் விசா விண்ணப்பதாரர்களின் நடத்தை, வரலாறு மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
சமூக ஊடக கண்காணிப்பு நடவடிக்கையும் தீவிரம்:
அமெரிக்க விசா கோரிக்கைகளை பரிசீலிக்கும் செயல்முறையில் தற்போது சமூக ஊடக கணக்குகள் முக்கிய ஆய்வுப் பொருளாக மாறியுள்ளன. சில சந்தேகங்கள் எழுந்த விண்ணப்பங்களின் நேர்காணல் தேதிகளை தூதரகம் ரத்து செய்ததோடு, அவர்களின் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகளை மையமாக வைத்து விசாரணை நடத்தி வருகிறது.