‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை திட்டத்தில் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில், திமுகவினர் முன்னெடுத்து வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையின் போது, பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதைத் தடுக்கக்கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுகவினர் வீட்டுக்கு வீடு சென்று, மக்களிடம் உறுப்பினராக சேருமாறு வலியுறுத்தி வருகின்றனர். முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென வீடுகளுக்குள் வருவதால், பொதுமக்களின் தனியுரிமை பாதிக்கப்படுகிறது.
மேலும், அவர்கள் பொதுமக்களிடம் ஆதார் எண், வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் போன்ற முக்கிய ஆவணங்களை கேட்டு, தேவையற்ற மனஅழுத்தம் அளிக்கின்றனர். என் வீட்டுக்கும் திமுகவினர் வந்தபோது, எங்களின் அனுமதி இல்லாமல், முதல்வர் மு.க.ஸ்டாலினின் படம் மற்றும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினார்கள்.
அதன் பின்னர், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வங்கி விவரங்கள், செல்போன் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை கோரினர். இத்தகவல்களை வழங்க மறுத்தபோது, அரசு வழங்கும் மாதாந்திர ₹1,000 உதவித் தொகையை நிறுத்தி விடுவோம் என மிரட்டியதாகவும், அவர்கள் சொல்லியிருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு மேலாக, மக்களின் போன் எண்களை பயன்படுத்தி தானாகவே திமுக உறுப்பினராக பதிவுசெய்து வருகின்றனர். தங்களின் விருப்பத்திற்கு எதிராக மக்கள் திமுகவிற்கு உறுப்பினராக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அரசியல் பிரச்சார நோக்கத்துக்காக ஆதார் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது முறைகேடானது. இது தேர்தல் விதிமுறைகளுக்கும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான செயலாகும்.
ஆதார் அமைப்பே அரசியல் கட்சிகளுக்கு ஆதார் தகவல்களை சேகரிக்க அனுமதி வழங்காத நிலையில், திமுகவின் இந்த செயல் சட்ட விரோதமானது. எனவே, திமுகவினர் மேற்கொள்ளும் இவ்வகை தனிப்பட்ட தகவல் சேகரிப்பை சட்டப்படி தடை செய்ய வேண்டும். ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆதார் மற்றும் பிற தகவல்களை உடனடியாக அழிக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு மற்றும் யூஐடிய்ஏ (UIDAI) அமைப்பின் தலைமை செயல் அதிகாரி இந்தச் சம்பவங்களை விசாரித்து, திமுக பொதுச் செயலாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்கிறது.