மான்செஸ்டர் டெஸ்ட் ஆட்டத்திற்கான லெவனில் இந்தியா மாற்றம் செய்யவேண்டும்” – ரஹானே கருத்து

“மான்செஸ்டர் டெஸ்ட் ஆட்டத்திற்கான லெவனில் இந்தியா மாற்றம் செய்யவேண்டும்” – ரஹானே கருத்து

இந்த மாதம் 23-ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ள இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் லெவனில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதென முன்னாள் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஆண்டர்சன்-சச்சின் டிராபி டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து பயணம் செய்து வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது மூன்று ஆட்டங்கள் முடிந்து உள்ளன. இதில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்த ரஹானே கூறியதாவது:

“இங்கிலாந்து மண், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பந்து வீச்சு அதிகமாக சுழலும். அந்த நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமம். ரன்கள் அடிப்பதும் கடினம். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சில் சிறந்து விளங்கியது. ஆனால், இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் சேர்க்கும் வாய்ப்பு இருந்தும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என நான் நினைக்கிறேன்.

இந்த நிலைமையில், இந்தியா மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஆடும் லெவனில் மாற்றம் செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, இன்னும் ஒரே ஒரு பவுலரை சேர்த்தால், எதிரணியின் அனைத்து 20 விக்கெட்டுகளையும் பிடிக்க முடிய வாய்ப்பு உள்ளது” என அவர் விளக்கியுள்ளார்.

இந்த நான்காவது டெஸ்டில் பும்ரா பங்கேற்பாரா? சமீப காலங்களில் ரன்கள் சேர்க்கத் தவறிவரும் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது குல்தீப் யாதவ் களத்தில் இடம் பெறுவாரா? போன்ற பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

Facebook Comments Box