Daily Publish Whatsapp Channel
அமேதியில் ஏகே-203 ரக உயர் தொழில்நுட்ப துப்பாக்கிகள் உற்பத்தி – இந்திய இராணுவத்திற்கு பலம் கூட்டும் முயற்சி
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி பகுதியில் அமைந்துள்ள இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டுச் செயல்பாட்டில் இயங்கும் துப்பாக்கி உற்பத்தி மையம், ஐஆர்ஆர்பிஎல் (India-Russia Rifles Private Limited), இந்திய பாதுகாப்புத் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில், ‘ஷேர்’ எனப் பெயரிடப்பட்ட ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த துப்பாக்கி நவீன ராணுவத் தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகும். ஒரு நிமிடத்தில் சுமார் 700 ரவைகள் வெடிக்கக்கூடிய திறன் கொண்டதுடன், 800 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் துல்லியமாக சுடக்கூடிய செயல்திறனும் இதில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும், மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமான ஏகே-203 ரக துப்பாக்கிகளை வழங்க ரூ.5,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை இந்த தொழிற்சாலையிலிருந்து 48,000 துப்பாக்கிகள் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று வாரங்களில் மேலும் 7,000 துப்பாக்கிகள் அனுப்பப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு முடிவதற்குள் கூடுதலாக 15,000 துப்பாக்கிகளை விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முந்தைய தலைமுறை ஏ.கே-47 மற்றும் ஏ.கே-56 போன்ற துப்பாக்கிகளைவிட ஏ.கே-203 பல முன்னேற்றங்களுடன் வந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய பாதுகாப்புத் துறையில் பயன்பட்டு வந்த இன்சாஸ் ரக துப்பாக்கிகளின் எடை சுமார் 4.15 கிலோவும், நீளம் 960 மில்லிமீட்டருமானதாகும். ஆனால், ஏகே-203 வெறும் 3.8 கிலோ எடையுடனும், 705 மில்லிமீட்டர் நீளத்துடனும் வடிவமைக்கப்பட்டிருப்பதால், வீரர்கள் இதை எளிதாகச் சுமந்து செயல்படுத்த முடிகிறது.
இந்த நவீன துப்பாக்கிகள், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் பல முக்கிய பாதுகாப்பு தளங்களில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இது அவர்களின் நடவடிக்கைகளில் செயல்திறனை மேம்படுத்தும் என்றும், இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்திக்கு புதிய பரிமாணம் சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.