Daily Publish Whatsapp Channel
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் நியமனத்தில் காலியிட விரிவாக்கம் செல்லாது – சென்னை ஐகோர்ட் உத்தரவு
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்குப் பிறகு, காலியிட எண்ணிக்கையை 35-இருந்து 54 ஆக அதிகரித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முதலில், தமிழ்நாட்டில் மூன்று பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவ தேர்வு வாரியம் 2020ல் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அப்போது COVID-19 ஊரடங்கினால் தேர்வுகள் நடத்தப்படவில்லை. பின்னர் இந்தப் பணியிடங்கள் 35 ஆக உயர்த்தப்பட்டன. அந்த அடிப்படையில், 2025 மார்ச்சில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 35 இடங்களைவிட கூடுதலாக, மொத்தம் 54 இடங்கள் நிரப்பப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் சித்தார்த், அண்ணாமலை மற்றும் அமிர்த செல்வராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி. குமரப்பன், தேர்வுப் பணிகள் முடிந்த பிறகு இடங்களை அதிகரிப்பது வழிமுறைபடி இல்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதென்றும் தெரிவித்தார். அவர் கூறுகையில், “அசாதாரண அல்லது அவசர தேவையின் கீழ் மட்டும் இப்படி இடங்கள் உயர்த்த முடியும். ஆனால் இக்கேஸில் அத்தகைய சூழ்நிலைகள் எதுவும் காணப்படவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தேர்வுக்குப் பிறகான இட உயர்வால், தேர்வில் போட்டியிட்டவர்களிடையே சம உரிமை பாதிக்கப்படும் என்றும், இது எதிர்காலத்தில் வேலையை எதிர்நோக்கும் வேறு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 35 பணியிடங்களை மட்டுமே தற்போது நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்ற முடிவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.