நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிட்ரா தீவைக் கையகப்படுத்த மத்திய அரசு வகுத்த திட்டம்

Daily Publish Whatsapp Channel

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிட்ரா தீவைக் கையகப்படுத்த மத்திய அரசு வகுத்த திட்டம்

லட்சத்தீவு ஒன்றியம் பல சிறிய தீவுகளால் ஆனது. அவை பல்வேறு அளவிலும், மக்களிருந்தாலும் இல்லாததுமான தீவுகளாக வகுக்கப்படுகின்றன. இதில் மக்கள் வசிப்பவை 10 தீவுகள். அவற்றுள் ஒன்று தான் பிட்ரா தீவு. இந்த இடத்தில் சுமார் 105 குடும்பங்கள் நிலைபெற்று வசித்து வருகின்றனர்.

இந்த தீவு இருக்கும் நிலப்பரப்புப் பகுதி, தேசிய பாதுகாப்பு பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததென மத்திய அரசு கருதி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நலன் கருதி பிட்ரா தீவை முழுமையாக பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லட்சத்தீவின் வருவாய் நிர்வாகத்தால் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், பிட்ரா தீவு நாட்டின் பாதுகாப்பு ரீதியாக முக்கியமான பகுதியாக இருப்பதால், அந்த தீவை முழுமையாக பாதுகாப்புத் துறைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நில உரிமை மற்றும் மற்வாழ்வு சட்டங்களின்படி, அந்த இடத்தில் வாழும் மக்கள், கிராம சபைகள் மற்றும் பிற பங்களிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக, பிட்ரா தீவில் குடியிருக்கும் 105 குடும்பங்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோல, லட்சத்தீவு தொகுதி எம்.பி. ஹம்துல்லா சயீத்தும் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“பிட்ரா தீவில் நிலவும் அமைதியை பாதிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இதற்கு முந்தைய காலங்களிலும், தேசிய பாதுகாப்பு காரணமாக மத்திய அரசு லட்சத்தீவின் பல பகுதிகளை பாதுகாப்புத்துறைக்கு ஒப்படைத்திருக்கிறது. ஆனால் பிட்ரா தீவில் மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல் இந்தவாறு திட்டமிடுவது முறையானது அல்ல. லட்சத்தீவு நிர்வாகமும், இதுவரை அந்த தீவின் மக்களிடம் கருத்துக் கேட்கவில்லை,” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பிட்ரா தீவினருக்காக அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில்,

“மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பிட்ரா மக்களுக்குப் பயம் ஏற்பட தேவையில்லை. உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக, நானும், லட்சத்தீவு நிர்வாகத்திலும் முக்கியமான தலைவர்களும் சேர்ந்து இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம். பிட்ரா மக்களுடன் இணைந்து, இந்த விவகாரத்தில் சட்டபூர்வமாகவும், அரசியல் நிலைப்பாட்டுடனும் எதிர்த்து போராடத் திட்டமிட்டுள்ளோம்” என்று உறுதியளித்துள்ளார்.

Facebook Comments Box