நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 இந்தியர்கள் உயிரிழப்பு – ஒருவர் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
நைஜரின் தலைநகர் நியாமியிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டோசோ நகரில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை குறிவைத்துத் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியா பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
“ஜூலை 15ஆம் தேதி டோசோ பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதலில், இரு இந்தியர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர. மேலும் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறோம்” என நைஜரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், நைஜரில் உள்ள அனைத்து இந்தியர்களும் தற்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மற்றும் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.