கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் – ராமதாஸ் தரப்பில் அதிரடி நடவடிக்கை

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் பாமக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் – ராமதாஸ் தரப்பில் அதிரடி நடவடிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர், கட்சியின் உள்கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக தலைமை நிலைய செயலாளர் ம. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் அவர்களின் அனுமதி அல்லது உத்தரவு இல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது பிற கட்சி நிர்வாகிகளோ தன்னிச்சையான முடிவுகள் எடுப்பது, கட்சியின் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், கட்சியின் மரியாதைக்கே கேள்வி எழுப்பும் செயல் எனக் கருதப்படும்.

சமீபமாக, பாமக எம்எல்ஏக்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சட்டமன்றக் கட்சி தலைவர் ஜி.கே.மணி கட்சி தலைமைக்கு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிசீலனைக்கு இது அனுப்பப்பட்டது.

முக்கியமாக, இந்த மூவரும் மற்றும் வழக்கறிஞர் கே. பாலு ஆகியோர், தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்து, பாமக எம்எல்ஏ இரா.அருள் மீது தவறான தகவல்களைச் சொல்லி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க முயன்றனர். இது கட்சியின் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் பாமக உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

மேலும், இவர்கள் நால்வரும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இவர்களிடம் கட்சி தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்களிடம் விசாரணை நடத்த முழு அதிகாரம் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு வழங்கியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box