வணிகக் கட்டிடத்திற்கு பதிலாக வீட்டு வரி’ – மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற விதிமீறல் எப்படி நடந்தது?

‘வணிகக் கட்டிடத்திற்கு பதிலாக வீட்டு வரி’ – மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற விதிமீறல் எப்படி நடந்தது?

மதுரை மாநகராட்சி முழுவதும் உள்ள 100 வார்டுகளிலும், வணிகக் கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை முறைகேடாகக் குறைத்து, வீட்டு வரியாக வசூலிக்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி, தற்போதைய ஆணையர் சித்ரா தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டு மீளாய்வு செய்யப்படுகிறது.

இதுவரை 200க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் குடியிருப்பு கட்டிடங்களாகக் காட்டப்பட்டு, குறைந்த வீட்டு வரி வசூலிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளைச் சேர்ந்த குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டிடங்களாக மொத்தம் 4,74,000 கட்டிடங்கள் உள்ளன. இவை மூலம் ஆண்டு வருவாய் ரூ.263 கோடி வரை கிடைக்கிறது. இருப்பினும், வணிக வளாகங்களின் எண்ணிக்கையை வைத்து வருவாயை ஒப்பிடும் போது, வருமானம் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ளது என்ற புகார்கள் பல ஆண்டுகளாக எழுந்துள்ளன.

2024ஆம் ஆண்டில் மட்டும் 150 கட்டிடங்களுக்கு சொத்துவரியை குறைத்து நிர்ணயித்து ஏமாற்றம் செய்ததாக, முன்னாள் ஆணையர் தினேஷ் குமார் 5 பேரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருந்தார். பின்னர் அரசியல் அழுத்தத்தால் அந்த பணி நீக்கங்கள் ரத்து செய்யப்பட்டன. போலீசார் வழக்கைப் பதிவு செய்யாமல் காலத்தை இழுத்தனர்.

தற்போது ஆணையர் சித்ரா இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்குத் துவக்கியதால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். இதில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சேர்ந்து 19 பேர் பணி நீக்கத்தில் உள்ளனர். மேலும் 5 மண்டலத் தலைவர்களும் 2 நிலைக்குழுத் தலைவர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேட்டில் நெருக்கமாக தொடர்புடைய அரசியல் சக்திகளும் இருப்பதாக எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்துகின்றன. எனவே அவர்களையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

தற்போது, அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கிய திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களை ஆய்வு செய்வதற்காக துணை ஆணையர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு செயல்படுகிறது. அந்த குழு, வீட்டு வரியாக வரி வசூலிக்கப்பட்ட முக்கிய வணிக கட்டிடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தவறுகள் உறுதியாகும் கட்டிடங்களுக்கு புதிதாக வணிக வரி நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பல வணிகக் கட்டிட உரிமையாளர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “முக்கிய வணிக கட்டிடங்களுக்கு அதிகாரிகள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்துகிறது. 200 திருமண மண்டபங்கள் வீட்டு வரி அடித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுக்கு புதிய வணிக வரி விதிக்கப்படுகிறது,” என தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையால், சொத்து வரியில் மாநகராட்சிக்கு 10% வருமான அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வருமானமான ரூ.263 கோடியுடன் சேர்த்து, கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, வருமானத்தை மீட்டெடுக்க தமிழக அரசு முழுமையான ஒப்புதலை அளித்துள்ளது. இதனால், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஆளும் கட்சி அதிகாரிகள் இதில் தலையிட முடியாமல் பின்னடைந்துள்ளனர்.

இப்போது, முறைகேட்டில் சிக்கிய வணிகக் கட்டிட உரிமையாளர்கள் எந்த இடத்துக்கும் பரிந்துரை செய்ய முடியாமல், ஏற்கனவே கொடுத்த பணத்தையும் திரும்ப பெற முடியாமல் தவிக்கின்றனர். இழந்த வருவாய் மீட்கப்பட்டால், மாநகராட்சிக்கு பெரும் நன்மை ஏற்படும் என்றும், பொதுமக்களிடையே நல்ல மதிப்பும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Facebook Comments Box