5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50% உயர்வு!
இந்தியாவில் இதய நோய்கள் பாதிப்புடன் சேர்ந்து அதற்கான மருந்துகளின் தேவைவும் கூடி வருகிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதய நோயால் இளவயதில் உயிரிழக்கும் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
இந்த நிலைமையை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய்கள் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள், செரிமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளுடன் ஒப்பிட்டால், இதய சிகிச்சைகளுக்கான மருந்துகள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளன.
இந்த தகவலை “பார்மாரேக்” (PharmaRack) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதில் நாட்டின் முன்னணி 17 மருந்து நிறுவனங்களின் விற்பனை புள்ளிவிவரங்களை ஆராய்ந்ததில், இதய நோய்க்கான மருந்துகள் 2021 ஜூன் மாதத்தில் ரூ.1,761 கோடிக்கு விற்பனையாக, 2025-ஆம் ஆண்டில் அது ரூ.2,645 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 10.7% வளர்ச்சி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் இதைப் பற்றி கூறுகையில்:
“நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பது, உயர் இரத்த அழுத்தம் அளவிடும் புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் தேவை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதய நோய் பாதிப்பு உண்மையாகவே அதிகரிக்கிறது. அதேவேளை, அதற்கான கண்டறிதல் கருவிகள் மேம்பட்டுள்ளன. நோயை தடுக்கும் முன்கூட்டிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன” என்றனர்.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 63% பேர் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 27% பேர் இதய நோய்களால் உயிரிழக்கிறார்கள் என்பது சுயமாகவே கவலையை தூண்டும் உண்மை எனக் கூறப்படுகிறது.