5 ஆண்டுகளாக நன்னடைவாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக்கிங் இல்லாத ரயில்வே கேட்களில் நியமிக்க தெற்கு ரயில்வேயின் அறிவுறுத்தல்
ஐந்து வருடங்களாக சிறப்பாக பணியாற்றி வரும் ரயில்வே கேட் கீப்பர்களை, இன்டர்லாக்கிங் வசதி இல்லாத ரயில்வே கேட்களில் நியமிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே, கடந்த 8ஆம் தேதி பள்ளி வாகனம் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இன்டர்லாக்கிங் வசதியின்றி செயல்படும் ரயில்வே கேட்களை தினசரி ஆய்வு செய்யவும், ரயில்வே துறை பல முக்கிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேட்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். இதில் கடமையை உரிய முறையில் நிறைவேற்றாத கேட் கீப்பர்களிடம் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே நேரத்தில், ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வே தலைமையகத்தில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ரயில்வே 11 முக்கிய நடைமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளின்படி,
- அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமரா நிறுவுதல்,
- அனைத்து கேட்களையும் இன்டர்லாக்கிங் முறைக்கு மாற்றுதல்,
- இன்டர்லாக்கிங் வசதி இல்லாத கேட்களை தினமும் ஆய்வு செய்தல்,
- லெவல் கிராசிங் இடங்களில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் கூறியதாவது:
“தெற்கு ரயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளாக நேர்த்தியாக பணியாற்றிய கேட் கீப்பர்களை, இன்டர்லாக்கிங் வசதியில்லாத கேட்களில் நியமிக்க வேண்டும்.
மேலும், ரயில்வே கேட்கள் 100 மீட்டர் தூரத்திலிருந்து தெளிவாக காட்சியளிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் புதர்களை அகற்ற வேண்டும். அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்” என்றார்.