கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கு: பாமக மற்றும் புரட்சி பாரத கட்சி உறுப்பினர்கள் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கு: பாமக மற்றும் புரட்சி பாரத கட்சி உறுப்பினர்கள் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, இன்று பாமகவும் புரட்சி பாரத கட்சியும் இணைந்து ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு முற்றுகை வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டிக்கு அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அந்த சிறுமி, அங்கு உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பில் கல்வி பயின்று வருகிறார். கடந்த ஜூலை 12ஆம் தேதி, வழக்கம்போல பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது, ரயில்நிலையம் அருகே ஒரு இளைஞர் அவரைப் பின்தொடர்ந்து, அருகே உள்ள மாந்தோப்புப் பகுதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார்.

அதன்பின் அழுதவாறு பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமி, நிகழ்ந்ததை உறவினரிடம் தெரிவித்தார். உடனடியாக அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றதுடன், பொன்னேரி மற்றும் சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி ஜூலை 19ஆம் தேதி வீடு திரும்பினார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் 5 தனிப்படை மற்றும் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழகத்துடன் அண்டை மாநிலமான ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட இடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த 10 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படாததை எதிர்த்து, பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் பாமக, புரட்சி பாரத கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வலியுறுத்தல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Facebook Comments Box