வங்கதேசத்தில் விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வு – அரசு ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு
வங்கதேச விமானப்படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள கல்வி நிறுவனக் கட்டடத்துடன் மோதிய நிகழ்வில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் அமைந்துள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று வங்கதேச விமானப்படையுக்குச் சொந்தமான எப்-7 பிஜிஐ வகை பயிற்சி விமானம் மோதியது. நேற்று மதியம் 1:06 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தது. இயந்திர தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பயங்கர விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 25 பேர் சிறுமிகள் என இடைக்கால குடியரசுத் தலைவர் முகமது யூனுசின் பிரத்யேக ஆலோசகர் சைதுர் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், சுமார் 170 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமையும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோகம் காரணமாக, நாடு முழுவதும் இன்று அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என வங்கதேச அரசு அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைகள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் நலனுக்காக அனைத்து மத நிறுவனங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். விபத்தின் சரியாக கண்டறியும் பொருட்டு, விமானப்படை உயர் மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.