இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம்: தமிழகத்திற்கு என்ன பயன்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. கடந்த பிப்ரவரியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் லண்டனுக்கு சென்றபோது, இந்த ஒப்பந்தம் இறுதிப் படியில் முடிவடைந்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் நகைகள், வைரங்கள், மருந்துகள், தேயிலை, அரிசி, மற்றும் ரசாயனப் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை இங்கிலாந்து அரசாங்கம் கணிசமாக குறைக்கிறது. அதேபோல், இந்தியா, இங்கிலாந்து தயாரிக்கும் சொகுசு வாகனங்கள், மதுபானங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் விமான உதிரிபாகங்கள் மீதான வரிகளை குறைக்கும். குறிப்பாக, இங்கிலாந்து தயாரிக்கும் சொகுசு வாகனங்களின் விலை இந்தியாவில் 30% வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம், சில எதிர்மறை பாகங்களை கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு முக்கியமான பலன்களை வழங்கும் என தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டான்ஸ்பா என்ற சூரிய மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா எம். ராஜா கூறுகையில்:
“இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டிற்கு மிகுந்த நன்மை தரும். ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் உணவுப் பொருட்கள், காலணிகள், நகைகள் போன்ற துறைகளில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு இது பயனளிக்கும். மேலும், இங்கிலாந்து வாகனங்களுக்கு தேவையான உதிரிப் பாகங்களை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெற்றுக்கொள்ள வாய்ப்பு அதிகரித்துள்ளது,” என்றார்.
அத்துடன், “இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த, தொழில் நிறுவனங்களுக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓஸ்மா தலைவர் அருள்மொழி கூறுகையில்:
“இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தம், இந்திய ஜவுளித் துறைக்கு பெரும் ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கும். ‘ஓ.இ.’ மில்களில் தயாரிக்கப்படும் துணிகள், கரூர் ஜவுளி வகைகள், திருப்பூர் பின்னலாடைத் துணிகள் ஆகியவற்றிற்கு அதிக ஏற்றுமதி ஆணைகள் கிடைக்கும்” என்றார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் ஏ. சக்திவேல்:
“இந்த வரலாற்று ஒப்பந்தம், இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் திருப்புமுனை அளிக்கிறது. தற்போது ஆண்டுக்கு 1.45 பில்லியன் டாலராக உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3.25 பில்லியன் டாலராக உயரும். இதில் நெசவுத் துணி ஏற்றுமதி மட்டும் 0.8 பில்லியனில் இருந்து 2 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இங்கிலாந்துக்கான மொத்த ஏற்றுமதியின் 70% ஆகும்.
முகில்களில் பணிபுரியும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும், உற்பத்தி வளர்ச்சிக்கும் இது சாதகமாக இருக்கும். மேலும், இங்கிலாந்து தற்காலிக வேலைக்கு செல்லும் இந்திய தொழிலாளர்கள், அந்நாட்டு சமூக பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை,” என்றார்.
விசைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் சக்திவேல் கூறியதாவது:
“இந்த ஒப்பந்தம், இந்திய ஜவுளி மற்றும் விசைத்தறி துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைகிறது” என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் டீமா உள்ளிட்ட பலரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.
ஆனாலும், சில எதிர்மறையான அம்சங்களும் இருப்பதாக இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் சுட்டிக்காட்டுகிறார்:
“இந்தியா தற்போது இங்கிலாந்துடன் வர்த்தக மேல் நிலை (Trade Surplus) கொண்ட நாடாக இருந்தும், இங்கிலாந்து நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் அளிக்கப்படுகிறது. இது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் போட்டியுத் திறனை பாதிக்கக்கூடும்.
மின்சார வாகனங்கள் மீது சுங்கக் கட்டணம் குறைவதால், இந்திய உற்பத்தியாளர்கள் சந்தையை இழக்க வாய்ப்புண்டு. மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்படக்கூடும்.
நூல், காலணி, கடல் உணவுகளுக்கு சுங்கக் கட்டணம் குறைப்பு போதுமானதாக இல்லை. ஆகவே, இந்தியா தனது உள்நாட்டு பொருளாதார நலன்களை மறுபரிசீலனை செய்து, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தங்களை திருத்த வேண்டும்” ஏற்றார்.
குறுக்குவழி சிக்கல்கள் இருந்தாலும், இங்கிலாந்து – இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய தொழில்துறைக்கு முழுமையாக முன்னேற்ற வாய்ப்பாகவே அமையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கும் இது ஒரு புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கும் என்பது தெளிவாகிறது.