உலகப் பில்லியனேர்கள் பட்டியலில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை!
ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) செயல்பட்டு வரும் இந்திய வம்சாவளியையுடைய சுந்தர் பிச்சை (வயது 53) உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கல்வியையே ஆயுதமாகக் கொண்டு முன்னேறியவர் சுந்தர் பிச்சை. 1993 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் உயர்கல்வி படித்தார். அதன் பின்னர், 2004ல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, தனது திறமையை அடையாளம் காட்டி, வெறும் 10 ஆண்டுகளில் உயர்ந்த பதவியை அடைந்தார்.
2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற இவர், 2019-ல் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
சுந்தர் பிச்சை தலைமையிலான கடந்த பத்து ஆண்டுகளில், ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக உயர்ந்து, 2023 முதல் முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத லாபத்தைத் திருப்பி அளித்துள்ளன. இதனடிப்படையில், பிச்சையின் சொத்து மதிப்பும் தற்போது 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடியாக) உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆல்பபெட் நிறுவனத்தைத் தொடங்கிய லாரி பேஜ் ₹171.2 பில்லியன் டாலரும், செர்ஜி பிரின் ₹160.4 பில்லியன் டாலரும் நிகர சொத்து மதிப்புடன், உலகச் செல்வந்தர்களில் முதல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.