தவெக விளம்பர ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படம் அகற்றப்பட்டு விஜய் புகைப்படம் மட்டும் இடம் பெறுமாறு உத்தரவு
தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார ஸ்டிக்கர்களில் இடம் பெற்ற புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை அகற்றி, நடிகர் விஜய் புகைப்படம் மட்டும் இடம்பெற வேண்டும் என தலைமை வழிகாட்டி உத்தரவிட்டதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் வட்டம், தாராசுரம் பகுதியில் தவெக தொண்டர்கள், “மக்கள் விரும்பும் உங்கள் வேட்பாளர் விஜய்” என குறிப்பிடப்பட்ட பிரச்சார ஸ்டிக்கர்களை 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒட்டியிருந்தனர். அந்த ஸ்டிக்கர்களில் விஜயுடன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில், தலைமை புதிய தீர்மானம் எடுத்ததாகக் கூறி, புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை அகற்றிய ஸ்டிக்கரை மட்டும் மீண்டும் அச்சிட்டு, ஏற்கனவே ஒட்டிய வீடுகளின் மீது புதிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தவெக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் பிரபாகர் கூறியதாவது:
“கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களில் இருந்து ஆனந்த் புகைப்படத்தை நீக்கி, விஜய் புகைப்படம் மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டிருக்கிறது. தலைமை அதற்கான அறிவுறுத்தலை அளித்தது. அதன்படி, ஏற்கனவே ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளுக்குச் சென்று, புதிய ஸ்டிக்கரை மேலாக ஒட்டி வருகிறோம்” என்றார்.