முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூவர் உயிரிழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏற்பட்ட துயரமான விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
“ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் அருகே உள்ள கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரேஷன் கடையில் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு டிராக்டரில் வெற்றிமாலை கண்மாய்க்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த டிராக்டர் சாலையிலிருந்து திடீரென விழுந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் – பொன்னம்மாள் (வயது 68), ராக்கி (62), முனியம்மாள் (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.”
“இந்த விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க உரிய உத்தரவை வழங்கியுள்ளேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
“உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், அவர்களின் உறவினர்களுக்கு மனப்பூர்வமான ஆறுதலும் தெரிவிக்கிறேன்” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.