சுற்றுலாவை வளர்க்க 40 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அரசின் புதிய அறிவிப்பு
சுற்றுலாத் துறையை வளர்த்தெடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில், 40 நாடுகளுக்கான இலவச சுற்றுலா விசா திட்டத்தை அறிவித்துள்ளது இலங்கை அரசு.
‘Hotel Show Colombo 2025’ நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் உரையாற்றிய இலங்கை வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் கூறியதாவது:
“தற்போதைய கட்டமைப்பின்படி, இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் பயணிகள் இலங்கைக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்புத்திசாலித்தனமான முடிவினால் அந்த எண்ணிக்கை 40 நாடுகளாக விரிவடைகிறது. இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் பெற்றுள்ளோம்.”
விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதால், ஆண்டுக்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், சுற்றுலாப் பயணிகள் பெருகுவதால் பெறப்படும் மறைமுக வருமானம், இந்த இழப்பை விட அதிகமாக இருக்கும் என்றார் அமைச்சர்.
இலவச சுற்றுலா விசா பெறும் 40 நாடுகள் பட்டியலில் உள்ளவை:
இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, போலந்து, கஜகஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத், நார்வே மற்றும் துருக்கியே.
இதனுடன், ஏற்கனவே இலவச விசா வழங்கப்பட்டிருந்த இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளும் இந்த புதிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.