முதல்வர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனை சென்றதற்கான காரணம் என்ன? – தமிழிசை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
“உயர் நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரும்போது பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும். அதனாலேயே முதல்வர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்,” என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து மருத்துவ துறையில் பல்வேறு முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மக்களை நோக்கி மருத்துவம், இதயம் காப்போம், நடக்கலாம் நலமடைவோம், மக்களை நோக்கி ஆய்வக சேவை, தொழிலாளர்களுக்கான மருத்துவ சேவை, புற்றுநோய் பரிசோதனை போன்ற பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2 ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இது, மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். முழு உடல் பரிசோதனை செய்யும் இந்த திட்டத்தில், தனியார் மருத்துவமனையில் 15,000 முதல் 20,000 வரை செலவாகும் பரிசோதனைகள், அரசு மருத்துவமனையில் 4,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் அளவுக்கு வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உரிய புற்றுநோய் பரிசோதனைகள் உட்பட பல சேவைகள் இந்த முகாம்களில் வழங்கப்படும்,” என்றார்.
பின்னர், முதல்வர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றதைக் குறித்து பாஜக மூத்த தலைவரான தமிழிசை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “தமிழிசை இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். எனவே அரசு மருத்துவமனைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். சமீபத்தில் பாதுகாப்பு துறை அமைச்சரின் மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். மேலும், பிரதமரின் சகோதரரும் தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
பொறுப்பில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அரசு மருத்துவமனைகளின் தரம் மிகச் சிறப்பாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவையை ஒவ்வொன்றாகப் பிரிக்கக்கூடாது. இப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது,” என்றார்.
தமிழிசை என்ன கூறினார்?
முன்னதாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: “தமிழ்நாட்டில் முதல்வர் உட்பட நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை இல்லாததே எனக்கு கவலையாக உள்ளது. கோடீஸ்வரர்களுக்குக் கிடைக்கும் சிகிச்சையை, கோடிகளில் வாழும் சாதாரண மக்களும் பெறவேண்டும் என்பதே என் ஆசை. புதுச்சேரியில் நான் தடுப்பூசி போட்டபோது, அரசு மருத்துவமனைக்குச் சென்றே போட்டுக்கொண்டேன். அந்த நிலை ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
அரசு மருத்துவமனையில் ஒரு ஏழை நபரின் இதயத்திற்கு பாதுகாப்பு இருக்கவேண்டும். அதற்காகவே முதல்வரும் நம்பிக்கையுடன் செல்லக்கூடிய அரசு மருத்துவமனைகள் தேவை. அரசு மருத்துவமனைகளும் அப்போலோ தரத்தை எட்டவேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன். இதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை,” எனக் குறிப்பிட்டார்.