“முதல்வரும் நம்பிக்கையுடன் சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே!” – தமிழிசை ஆதங்கம் பகிர்வு
“தமிழகத்தில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெறக்கூடிய அரசு மருத்துவமனைகள் இல்லாததே எனது மன வேதனை” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழிசை கூறியதாவது:
“தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மக்களுக்கு முழுமையான சிகிச்சை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நீண்டநாள் விருப்பம். நிர்வாக பொறுப்பில் இருந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கென நான் சிறப்பு கவனம் செலுத்தி வந்தேன்.
புதுச்சேரியில் சமீபத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மூன்று குழந்தைகள் பேருந்து மோதி படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் நிலை மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அதனால், பெற்றோர்கள் “அவசரமாக குழந்தைகளை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருங்கள்” என கேட்டனர்.
அப்போது துணை நிலை ஆளுநராக நான் நேரில் பார்த்தேன். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் குழந்தைகளை காப்பாற்ற இயலும் என்பதை உணர்ந்தேன். பெற்றோரிடம், “தனியார் மருத்துவமனையில் தேடும் அனைத்து வசதிகளும் இங்கே உள்ளன; நிச்சயமாக அரசு மருத்துவமனையிலேயே குணப்படுத்த முடியும்” என்று உறுதி அளித்தேன். அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சிலர் தயங்கினார்கள் – “குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நமக்குத்தான் குற்றம் சொல்வார்கள்” என்று சொல்லினார்கள்.
ஆனால், அந்த பயத்தால் குழந்தைகளை பலியாக்க முடியாது என்பதில் உறுதியுடன் இருந்தேன். பிறகு, அந்த மூன்று குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்தது. அவர்கள் பிழைத்தனர். இதுபோன்ற சேவையையே அரசு மருத்துவமனைகள் வழங்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
ஆனால், இன்று தமிழகத்தில் முதல்வர் உட்பட யாரும் நம்பிக்கையுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை இல்லை என்பதே எனது ஆதங்கம். கோடீஸ்வரர்கள் பெறும் தரத்தில் சிகிச்சை, ஏழைகள் உட்பட பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டியது தான் சமூகநீதி.
நானும் கடந்த காலத்தில் தடுப்பூசி போடும்போது, அரசுமருத்துவமனைக்குச் சென்று போட்டேன். ஆனால் அதே தரம் இன்று தமிழகத்தில் இல்லை என்பதே எனது வேதனை. ஏழைகளின் உயிருக்கும் பாதுகாப்பு தேவை. அதற்கு அரசு மருத்துவமனைகள் ஏற்கும் தரத்தில் செயல்பட வேண்டும்.
அதன் மூலமாக, முதலமைச்சரும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் நிலையை ஏற்படுத்த வேண்டும். ‘அப்போலோ’ தரத்தில் அரசு மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்பதே நான் கூற விரும்பும் எண்ணம். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை” என்று தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.