பிரதமர் மோடிக்கு 10 கிலோமீட்டர் ரோடு ஷோ: மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரவு தூத்துக்குடியிலிருந்து தனியார் விமானத்தில் திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர், அவர் காரில் பயணம் செய்து, திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மேரியாட் ஹோட்டலில் தங்கினார்.
அடுத்த நாள் காலை 11.10 மணியளவில், மோடி ஹோட்டலிலிருந்து திருச்சி விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். மேஜர் சரவணன் சாலை, பாரதிதாசன் சாலை, தலைமை அஞ்சல் நிலைய வட்டம், குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல் கேட், சுப்பிரமணியபுரம் வழியாகச் சென்ற அவர், 11.31 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தார். இந்த 8 கி.மீ. பாதையில் சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கட்சியினர், பொதுமக்கள் திரண்டனர். அவர்களுக்கு மோடி காரிலிருந்தபடியே கையசைத்து வாழ்த்து கூறினார்.
காலை 11.45 மணிக்கு, பிரதமர் ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி புறப்பட்டார். விமான நிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், மேயர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் பிரதமருக்கு வரவேற்பளித்தனர். பிரதமரின் வருகையை ஒட்டி திருச்சி மாநகரில் முழுமையான காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதேபோன்று, கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் பொன்னேரி ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டிலிருந்து கோயில் விழா நடைபெறும் இடம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நிகழ்த்தினார். இந்த வழியிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.