10 நிமிடங்களுக்கும் மேல் நிற்கும் ரயில்களில் கழிப்பறைகள் கட்டாயமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்: ரயில்வே உத்தரவு
ரயில் நிலையங்களில் குறைந்தது 10 நிமிடங்கள் நிற்கும் ரயில்களில் உள்ள கழிப்பறைகளை நிச்சயமாக சுத்தம் செய்ய வேண்டும் என ரயில்வே வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெடுந்தூர பயணிக்கும் ரயில்களில் கழிப்பறைகள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. ரயில்களில் தண்ணீர் குழாய்கள் பழுதடைந்திருப்பதும், போதுமான அளவில் தண்ணீர் நிரப்பப்படாமை போன்ற காரணங்களால், கழிப்பறைகள் பலசமயம் அழுக்காக காணப்படுகின்றன.
இந்நிலையில், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிற்கும் ரயில்களில், கழிப்பறைகள் கட்டாயம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய முக்கிய நிலையங்களுக்கு கூடுதலாக, கழிப்பறை சுத்தம் செய்ய ஏற்ற பிற இடங்களையும் பரிந்துரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து இறுதி முடிவை ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் எடுக்க வேண்டும்.
அத்துடன், ஒவ்வொரு ரயிலுக்கும், எந்தெந்த நிலையங்களில் இது நடைமுறைக்கு வரும் என்பதற்கான விவரங்களை தொகுத்து, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘சுத்தமான ரயில் நிலையம்’ என்ற திட்டம் இந்திய ரயில்வேயால் 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட இடங்களில் ரயில்கள் நிற்கும் போது கழிப்பறைகளை சுத்தமாக்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு நிலையங்களில் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கழிப்பறைகளை முழுமையாக சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல், குப்பைகள் அகற்றுதல் போன்றவை இயந்திரங்களின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.