பிரபலமான டிசிஎஸ் நிறுவனம் 2% பணியாளர்களை குறைக்க திட்டம்: சுமார் 12,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் நேற்று வெளியிட்ட தகவலில்,
2026-ம் ஆண்டு நிதிக் காலத்தில் நிறுவன ஊழியர்களில் 2 சதவீதமானோர் குறைக்கப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. புதிய சந்தை வாய்ப்புகளில் கலப்பது, புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து, அவர்களை மாற்று பணிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையால், சுமார் 12,200 பணியிடங்கள் குறைக்கப்படும் நிலை உருவாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாத வகையில் இந்த மாற்றம் திட்டமிட்டு, கவனமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் டிசிஎஸ் விளக்கியுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை தற்போது மிகுந்த நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல நிறுவனங்கள் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் முடிவெடுப்பதில் மற்றும் திட்டங்களைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் தெரிவித்தார்.