கம்போடியா – தாய்லாந்து இடையே போர் நிறுத்தம் தொடர்பான சந்திப்பு: மலேசியாவில் இன்று நடைபெறுகிறது
கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு பக்கத்தினரும் உடன்பாடு ஏற்பட வழிவகுக்கும் வகையில் தங்களுடைய தலைவர்கள் இன்று மலேசியாவில் நேரில் சந்திக்கின்றனர்.
கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோர் இன்று (ஜூலை 28) பிற்பகலில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் மலேசியா இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி வியாழக்கிழமை, எல்லைப்பகுதியில் நடந்த கண்ணிவெடி வெடிப்பில் 5 தாய்லாந்து ராணுவத்தினர் காயமடைந்ததையடுத்து, இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான சண்டையைத் தொடங்கின. இந்த மோதலுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். 5 நாட்களாக தொடரும் மோதலின் காரணமாக இரு தரப்பிலும் 35 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், 2.6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர். இரு நாடுகளும் தங்களது தூதர்களை வாபஸ் அழைத்துள்ளதுடன், எல்லைப் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்கத் தலைவர் டொனால்டு ட்ரம்பின் நேரடி அழுத்தத்தின் பேரில் இந்த சந்திப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து மோதல் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா எந்த வர்த்தக உடன்படிக்கைகளையும் தொடரமாட்டோம் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கோலாலம்பூருக்கு புறப்படுவதற்கு முன்பு பாங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம், “இந்தச் சந்திப்பில் அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையாளர்களாக இருப்பார்கள். உடனடியாக மோதலை நிறுத்துவது இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். கம்போடியா மீது நாங்கள் நம்பிக்கை வைக்க முடியாது. அவர்கள் இந்த விவகாரத்தை தீர்க்க நேர்மையுடன் முன்வரவில்லை” என தெரிவித்தார்.