வான்வழி போரை கைப்பற்றும் இந்தியா: சீனா, அமெரிக்காவை மிஞக்கும் காண்டீபம் ஏவுகணை!

உலகிலேயே மிக நீளமான ஹைப்பர்சோனிக் க்ரூஸ் வகை ஏவுகணையை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ‘காண்டீபம்’ எனும் பெயருடன் அறிமுகமான Astra Mk 3 ஏவுகணை, இந்திய விமானப்படைக்கு பெருமையளிக்கும் ஆயுதமாகத் திகழ்கிறது. அதைப் பற்றிய விரிவான தகவல்கள்:

இந்திய விமானப்படையின் வான்வழிப் போர் திறன், நாட்டின் பாதுகாப்பு திறனுக்கே அஸ்திவாரம். ஒருகாலத்தில், இந்தியா ரஷ்யாவின் R-77, பிரான்ஸின் MICA, இஸ்ரேலின் ஏவுகணைகளை சார்ந்தே வந்தது.

ஆனால், அவசரமான சூழ்நிலையில் ஏவுகணை கிடைக்காத நிலை ஏற்பட்டால்? உதிரிப்பாகங்கள் இல்லாமல் போனால்? என்ற கவலையின் காரணமாக, இந்தியா தன்னிச்சையான ஏவுகணை உற்பத்தியை தொடங்கியது.

1990-களின் ஆரம்பத்தில் DRDO விஞ்ஞானிகள், காட்சிக்கு அப்பால் தாக்கும் ஏவுகணையை உள்நாட்டில் உருவாக்கும் கனவில் களமிறங்கினர். சிறிய முயற்சியாக தொடங்கிய இந்த முயற்சி, இப்போது உலக தரத்தில் இடம்பிடித்துள்ளது.

Beyond Visual Range (BVR) ஏவுகணை என்பது, கண்ணுக்குப் புலப்படாத 300 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறனுடையது. விமானி இலக்கை நேரில் காண முடியாது; ஆனால் ரேடார் உதவியுடன், தானாக இலக்கை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.

Astra Mk1 தான் முதற்கட்ட வெற்றியடைந்த ஏவுகணை. 3.6 மீ நீளமும், 154 கிலோ எடையுமுடைய Mk1, 100 கி.மீ தூர இலக்கைத் தாக்கும் திறனுடன், தானாக திசைமாறும் எதிரி விமானங்களையும் பின் தொடரும் திறன் பெற்றது.

பல்வேறு சோதனைகளுக்குப் பின், கடந்த ஆண்டு Astra Mk1 உற்பத்திக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 2,971 கோடி ரூபாயில் 350 ஏவுகணைகள் உற்பத்திக்கான ஒப்பந்தம் பாரத் டைனமிக்ஸ் நிறுவத்துடன் கையெழுத்தானது. ஒரு ஏவுகணையின் உற்பத்தி செலவு 8 கோடியில் இருந்து குறைவாக இருக்கும் – இது இறக்குமதி செலவைக் காட்டிலும் குறைவு.

அடுத்து உருவாக்கப்பட்டது Astra Mk2. இது சுமார் 175 கிலோ எடையுடன், 145 கி.மீ தூர இலக்கை தாக்கும் திறன் கொண்டது. Dual-pulse தொழில்நுட்பம் மூலம் Mk2, ‘நேர்த்தியான தாக்கப்பகுதியில்’ இலக்கைத் தவிர்க்க முடியாத முறையில் தாக்கும்.

இப்போது, அதைவிட மேம்பட்ட Astra Mk3 – காண்டீபம். இது நாட்டின் பாதுகாப்புக்கான முக்கிய ஆயுதங்களுள் ஒன்றாக DRDO உருவாக்கியுள்ளது.

காண்டீபம் ஏவுகணை, 340 கி.மீ தூர இலக்கை மிகுந்த துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது. இது சீனாவின் PL-15 (300 கி.மீ), அமெரிக்காவின் AIM-174 (240 கி.மீ) ஆகியவற்றை மிஞ்சும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இது 20 கி.மீ உயரத்தில் உள்ள இலக்கை 340 கி.மீ தூரத்தில் இருந்தும், 8 கி.மீ உயரத்தில் உள்ள இலக்கை 190 கி.மீ தூரத்தில் இருந்தும் தாக்கும் திறன் கொண்டது. கூடுதலாக, 1,500 கி.மீ தூர இலக்கைத் தாக்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

காண்டீபம் Mach 4.5 வேகத்தில் பறக்கும் – இது ஒலியின் வேகத்தைவிட நான்கு மடங்கு அதிகம்.

தற்போது, ரஃபேல் விமானங்களில் Meteor ஏவுகணைகளுடன் காண்டீபம் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் Su-30MKI, தேஜஸ் மற்றும் MiG-29 போர் விமானங்களிலும் இணைக்கப்பட உள்ளது. Solid Fuel Ducted Ramjet (SFDR) எனப்படும் உந்துவிசை அமைப்பு காண்டீபத்தின் முக்கிய அம்சம்.

ராம்ஜெட் என்ஜின் இயங்கும் போது காற்றை உள்ளிழுக்கிறது, சுருக்குகிறது, எரிபொருளுடன் கலக்கிறது, எரிகிறது, பின்னர் அந்த எரிந்த வாயுக்கள் வெளியேறும் போது உந்துதலாக மாறுகிறது. இது இயங்கும்போது எளிமையான வடிவமைப்புடன், அதிக சக்தி திறனை வழங்குகிறது.

தற்போது, Gallium Arsenide தொழில்நுட்பத்தை கொண்ட AESA ரேடார் தேடுபொறி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உற்பத்திக்கான கட்டத்தில் Gallium Nitride (GaN) தொழில்நுட்பம் கொண்டு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Gallium Nitride அதிக வெப்பம் எதிர்த்து செயல்படும் திறன் கொண்டது. குறைந்த மின்னழுத்தத்தில் அதிக செயல்திறனை வழங்கும். எதிரி நாட்டின் மின்னணு தடுப்புகளை மீறி, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உடையது.

காண்டீபம் உற்பத்தி வேலைவாய்ப்பை உருவாக்கி, பிற அறிவியல் திட்டங்களுக்கும் வழிகாட்டும். அதிக எண்ணிக்கையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறன் கிடைக்கும்.

ஏற்கனவே மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரேசில் போன்ற நாடுகள் Astra ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. காண்டீபத்தின் வளர்ச்சி இந்திய பாதுகாப்புத் துறைக்கு புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது.

DRDO தலைவர் டாக்டர் சமீர் காமத் கூறியதாவது: “வெகுஜன உற்பத்தி 5 ஆண்டுகளில் முழுமை பெறும். வேகம், துல்லியம், நிலைத்தன்மை – இந்த மூன்றிலும் காண்டீபம் உலகளவில் முன்னணி.”

ஒருகாலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்று அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்கி, ஏற்றுமதியும் செய்யும் நிலையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் வான்வழிப் போர்திறன், காண்டீபம் ஏவுகணையால் புதிய வரலாற்றைக் எழுத்து வருகிறது.

Facebook Comments Box