5 செஷன்கள் விளையாடுவது சாதாரண விஷயம் இல்லை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து
இங்கிலாந்து அணியுடன் மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணி வியக்கத்தக்க அளவில் பதிலளித்து போட்டியை டிரா செய்தது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்களை இழந்த இந்திய அணி, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் 188 ரன்கள் கூட்டாண்மை மூலம் மீண்டு வந்தது.
ஷுப்மன் கில் 103 ரன்கள், கே.எல்.ராகுல் 90 ரன்கள் எடுத்து வெளியான பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து மிக அருமையான ரீதியில் ஆடியது. இவர்கள் 334 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காமல், அவர்களை நீண்ட நேரம் பீல்டிங் செய்ய வைத்தனர்.
போட்டியின் கடைசி நாளில் 15 ஓவர்கள் மீதம் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை டிராவில் முடிக்க முன்வந்தார். ஆனால், ஜடேஜா அதனை ஏற்க மறுத்தார். அப்போது ஜடேஜா 90 ரன்களும், சுந்தர் 85 ரன்களும் எடுத்து இருந்தனர். அந்த நிலையிலும் இருவரும் தனிப்பட்ட சாதனைக்குப் பதிலாக அணிக்காக களத்தில் மாறாத தீவிரத்துடன் விளையாடினர். இறுதியில் ஜடேஜா 107*, சுந்தர் 101* ரன்களுடன் சதங்களை எட்டி போட்டியை டிராவில் முடித்தனர்.
இந்த ஆட்டத்தின் முக்கியத் தருணங்களில் ஒன்று பென் ஸ்டோக்ஸின் பந்தில் வாஷிங்டன் சுந்தர் விளாசிய ஹூக் சிக்ஸர் ஆகும், அது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தோல்வியின் நெருங்கிய நிலைமையில் இருந்த இந்தியா, மன உறுதியுடன் விளையாடி போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. இது வெற்றியுடன் சமமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசும்போது, “நான் 2009ல் நேப்பியரில் விளையாடிய இன்னிங்ஸ் பற்றி வீரர்களிடம் எந்தக் குறிப்பும் செய்யவில்லை. அதெல்லாம் இப்போது வரலாறு. இன்றைய வீரர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்கவேண்டும் என்ற எண்ணமே எனக்கு உள்ளது. இந்த அணியில் யாரும் யாரையும் பின்தொடரவில்லை, அவர்கள் தங்களால் முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“இந்த வீரர்கள் இந்தியக்காக போராடுகிறார்கள். அவர்கள் விளையாடிய 5 செஷன்கள், பந்துவீச்சு அழுத்தம், போட்டித் சூழ்நிலை ஆகியவற்றுக்கேற்ப அவர்களின் செயல்திறனை வெளிக்காட்டியது. இதுபோன்ற சூழ்நிலையில் தாக்குதல்களை எதிர்கொண்டு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிக முக்கியமானது. இது வீரர்களுக்குள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
ஓவலில் நடைபெறும் கடைசி டெஸ்டில் நம் அணிக்கு இது நம்பிக்கையை உருவாக்கும். ஆனால் எந்த ஆட்டத்தையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது இந்திய அணி. மாற்றத்துக்கான கட்டத்திலில்லை. சிறந்த 18 வீரர்களே அணியில் உள்ளனர். அவர்களில் சிலரிடம் அனுபவம் உள்ளது, சிலரிடம் இல்லை – நாங்கள் அதைப் போல் அணுகுகிறோம்.
முக்கியமாக, வீரர்கள் கடைசி நாளில் விளையாடிய விதத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். அழுத்தமான சூழ்நிலையில் 5 செஷன்கள் முழுவதும் விளையாடி வெறும் 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து போட்டியை டிரா செய்தது என்பது எளிதான விஷயமல்ல,” என கவுதம் கம்பீர் தெரிவித்தார்.