அமெரிக்கா மருத்துவ சிகிச்சை: பரிந்துரை கடிதம் தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு
அமெரிக்காவில் சிகிச்சை பெறும் நோக்கில், இந்தியாவில் உள்ள மருத்துவரால் வழங்கப்படும் பரிந்துரை கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதய சிகிச்சை பெற அமெரிக்கா செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு அசோக் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அசோக் குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அவகாசம் கோரப்பட்டது:
விசாரணையின் போது அமலாக்கத் துறை தரப்பில், “விசாரணை அதிகாரி பலமுறை சம்மன்கள் அனுப்பினும், ஒருமுறை கூட அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கப்படக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாவது: “அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்திய மருத்துவரின் பரிந்துரை கிடைப்பது அவசியமானது. அப்படி பரிந்துரை வழங்கப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களை இதுவரை ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?” என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அசோக் குமாரின் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், அமெரிக்காவில் சிகிச்சைக்கு செல்ல தேவையான இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.