வெற்றிகரமாக விண்ணை அடைந்த ஃபால்கன் – 9 ராக்கெட்!
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஃபால்கன் – 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை நோக்கி புறப்பட்டிருக்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்பும் நோக்கில் நாசா திட்டமிட்டது. இந்த ஆக்சியம்-4 எனும் முயற்சியில், இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், மோசமான வானிலை மற்றும் ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த திட்டம் 6 முறைகள் பிந்தியதாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், வானிலை 90 சதவீதம் ஆதரவாக இருப்பதால் திட்டமிட்டபடி ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்படும் என நாசா அறிவித்தது. அதன்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் 4 பேரும் சவாரியாக இருந்த ஃபால்கன்-9 ராக்கெட், பல சவால்களை மீறி விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, இந்திய நேரப்படி மதியம் 12:01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்குப் புறப்பட்டது.
இந்த ராக்கெட் நாளை மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன், வளிமண்டலத்தை கடந்த பிறகு டிராகன் விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து செயல்படுமெனவும், அதன் பின்னர் அது விண்வெளியில் நிலையாகச் சென்று பூமியை சுற்றும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் அனைவரும் அங்கு 14 நாட்கள் தங்கி அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 விஞ்ஞானப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும், அதில், பிராணவாயு மற்றும் நீர் இல்லாத சூழலில் செடிகள் மற்றும் பயிர்கள் எப்படி வளர்கின்றன என்பதை ஆராயும் முயற்சியில் சுபான்ஷு சுக்லா ஈடுபட உள்ளார் என நாசா தகவல் தெரிவித்துள்ளது.