AI வரப்பிரசாதமா? சாபமா? – இன்னும் 2 ஆண்டுகளில் மறையும் வேலைகள்! – சிறப்பு அறிக்கை!
செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக வரும் 24 மாதங்களில் பல துறைகளில் பணியிடங்கள் மிக விரைவில் மாயமாகும் நிலைக்கு வந்துள்ளன. எந்தெந்த வேலைகள் ஒழிகின்றன? இச்சூழ்நிலையில் யார் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியும்? என்பதனை அலசும் தகவல் தொகுப்பு இது.
இன்றைய சூழலில் அனைத்தும் AI-யால் இயங்கும் நிலையில், AI தொழில்நுட்பம் அசாதாரண வளர்ச்சி பெறுகிறது. மருத்துவம், சில்லறை வியாபாரம், படைப்பூக்கம் சார்ந்த துறைகள், நிதி சேவைகள், சுகாதார சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் AI புகுந்துவிட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் சுமார் 1/3 பணியிடங்கள் AI வசம் செல்லும் என மெக்கின்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI வேலை இழப்புகளை வெறும் தொழிற்துறையில்தான் ஏற்படுத்தும் என்பது தவறான எண்ணம். எல்லா துறைகளிலும் பல வேலைகள் AI காரணமாக மறைந்து போகும் எனவே பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Replit என்ற டெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் AI நிபுணரான அம்ஜத் மசாத், 2027க்குள் பல வேலைகள் இல்லாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் பிரசித்தி பெற்ற போட்காஸ்ட்களில் ஒன்றான “The Diary of a CEO”-வில் ஸ்டீவன் பார்ட்லெட்டிடம் பேசிய அம்ஜத் மசாத், மீண்டும் மீண்டும் செய்யப்படும் கணினி சார்ந்த பணிகளை நம்பி இருக்கும் எந்த வேலையும் அழிவின் விளிம்பில் உள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.
மளிகை கடைகளில் முதல் டெக் நிறுவனங்கள் வரை சுய சேவைக் கட்டமைப்புகள் உருவாகி வருகின்றன. வரி கணக்கீட்டு மென்பொருள்கள் அதிகரித்துள்ளன. இவை சட்டப்பூர்வ ஆவணங்கள், நிதி அறிக்கைகள், மற்றும் சிக்கலான ஆவணங்களை சில நிமிடங்களில் உருவாக்குவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளன. எனவே, கணக்காளர்கள், நிதி ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் போன்ற உயர்தர பணியாளர்களின் வேலைகளும் அபாயத்தில் உள்ளன.
“Text In – Text Out” எனப்படும் தரவுகளை உள்ளிடும், தட்டச்சு செய்யும், தரம் மற்றும் தகவலை சரிபார்க்கும் விதமான இயல்பான, திரும்ப திரும்ப செய்யப்படும் வேலைகளும் இப்போது தேவை இல்லாதவையாக மாறும் என அம்ஜத் மசாத் குறிப்பிட்டுள்ளார். AI-க்கு ஏற்ற வகையிலான அனைத்து பணிகளும் முதலில் இல்லாத jobs பட்டியலில் சேரும் எனவும் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக்குத் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன், AI மனிதர்களிடம் இருந்து கட்டுப்பாட்டை கைப்பற்றக்கூடும் என்றும், AI வளர்ச்சி ஆபத்தான பாதையில் செல்லும் என எச்சரித்துள்ளார்.
மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ், கூகுளின் சுந்தர் பிச்சை, ஓப்பன்ஏஐயின் சாம் ஆல்ட்மன் உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்கள், AI வளர்ச்சி வேகமும், அதன் எதிர்கால பாதையும் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சர்வதேச அளவில் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் AI சார்ந்த வேலைவாய்ப்புகள் 21% உயர்வடைந்துள்ளன. Bain & Company வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2027ஆம் ஆண்டுக்குள் AI துறையில் மட்டும் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மனித திறனும் இயந்திர திறனும் இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. “வேலை பாதுகாப்பா?” என்ற கேள்வி மட்டுமே முக்கியமல்ல; AI மூலம் மாற்றமடைய முடியாத திறன்களை வளர்த்துக் கொள்வதே இன்றைய முக்கிய தேவை.