பவானிசாகர் அணையிலிருந்து ஜூலை 31 முதல் நீர் வெளியீடு: தமிழக அரசின் அறிவிப்பு

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 135 நாட்களுக்கு, மொத்தமாக 26,827.20 மில்லியன் கன அடியை கடந்துவிடாமல் நீர் வெளியிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையிலிருந்து, 2025-2026ஆம் ஆண்டுக்கான முதல்போக பாசனத்துக்காக, கீழ்பவானி திட்டத்தின் பிரதான கால்வாய் இரட்டை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றை மதகுகள் வழியாக, மொத்தம் 1,03,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கப்படும்.

இதன்படி, 31.07.2025 முதல் 14.08.2025 வரை, 15 நாட்களுக்கு தினசரி 2300 கனஅடி/விநாடி வீதத்தில், 2,980.80 மில்லியன் கன அடியை தாண்டாத வகையில் சிறப்பு நனைப்பாகவும், 15.08.2025 முதல் 12.12.2025 வரையிலான 120 நாட்களுக்கு, நன்செய் முதல்போகப் பாசனமாகவும், 23,846.40 மில்லியன் கன அடிக்கு மேல் இல்லாத வகையில் நீர் திறக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 135 நாட்களுக்கு 26,827.20 மில்லியன் கன அடியை விடாத அளவில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.”

இதன் மூலம், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் வட்டம், மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கான நீர் வசதி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள வேறு செய்தியில், “திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 22,114 ஏக்கர் நிலங்களுக்கும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 20,622 ஏக்கர் நிலங்களுக்கும் பாசன வசதி செய்ய, மேட்டூர் அணையிலிருந்து 01.08.2025 முதல் நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box