‘கூலி’க்கு முன்னர் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ரஜினிகாந்தின் 5 படங்கள்!
ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு சினிமா தணிக்கை குழுவால் ‘ஏ’ வகை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தையதாக, ரஜினிகாந்த் நடித்த 5 படங்களும் இதே ‘ஏ’ சான்றிதழைப் பெற்றுள்ளன.
ரஜினியின் 171வது படமான கூலியில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இப்படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதீத ஆக்ஷன் காட்சிகள் அடங்கியதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்று ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது என்பதாலும் இது குறிப்பிடத்தக்கது.
‘கூலி’க்கு முந்தைய ரஜினியின் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற 5 படங்கள்:
சிவா (1989) – ரஜினிகாந்த், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஆக்ஷன் டிராமா வகை படமாக வந்தது. இது ஒரு இந்தி படத்தின் மறுஆக்கம்.
நான் சிகப்பு மனிதன் (1985) – எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் ‘விஜய்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கல்லூரி பேராசிரியர் சமூக விரோதிகளை எதிர்த்துப் போராடும் கதையை கொண்டது. இதுவும் ஒரு இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.
நான் மகான் அல்ல (1984) – எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தில், ரஜினிகாந்த் விஸ்வநாத் எனும் வழக்கறிஞராக நடித்துள்ளார். பழிவாங்கும் கதைமாதிரியாக கதை அமைந்துள்ளது.
புதுக்கவிதை (1982) – இது ஒரு கன்னட படத்தின் தமிழாக்கம். காதல் மற்றும் குடும்பம் மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. “வெள்ளை புறா ஒன்று” என்ற புகழ்பெற்ற பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றது. இசை இளையராஜா, இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
நெற்றிக்கண் (1981) – ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் — தந்தை மற்றும் மகனாக — நடித்த படம். எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்திற்கு, வசனம் விசு, திரைக்கதை கே. பாலச்சந்தர். தந்தை-மகனுக்கிடையிலான முரண்பாடுகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.