ஆகஸ்ட் 7 அன்று ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை!
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், வரும் ஆக. 7ம் தேதி காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தியின் டெல்லி இல்லத்தில் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 70 முதல் 80 தொகுதிகளில் மோசடி நடந்திருக்கலாம் என்று ராகுல் காந்தி நேற்று கூறிய குற்றச்சாட்டு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அன்றைய தினம் நடைபெற உள்ள இக்கூட்டம், டெல்லியில் அமைந்துள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பீகாரில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR), மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வாக்காளர் பட்டியல் விவகாரம், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், டொனால்டு ட்ரம்பின் நடுநிலை முயற்சி போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், வரவிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்திற்குப் பிறகு, இந்தியா கூட்டணியின் இது இரண்டாவது முக்கிய சந்திப்பாகும். கடந்த ஜூலை 19 ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதற்கிடையே, தேசிய மாநாட்டின் தலைவராக இருக்கும் ஃபரூக் அப்துல்லா, இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார். “பீகாரில் தற்போது ஆட்சி செய்து வரும் கட்சி வெற்றிபெறும் வகையில் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளது. அந்த நாளில் நான் ராகுல் காந்தியைச் சந்திக்கப் போகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.