“வீட்டில் அமைதி இல்லையென்றால் பணமும், புகழும் பயனற்றவை” – ‘கூலி’ இசை விழாவில் ரஜினிகாந்த் உரை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கூலி’. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பை அனிருத் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் உரையாற்றியதாவது:
“இந்த பட வேலைகள் தொடங்கியபோது, நடன இயக்குனர் சாண்டி ‘தூள் கிளப்பலாம்’ என உற்சாகத்துடன் சொன்னார். நான், ‘இது 1950-களின் மாடல் காரு மாதிரி. லட்சக்கணக்கான கிலோமீட்டர் ஓடியது. பாக்ஸ் எல்லாம் மாறியிருக்குது. அதிகம் ஆட வேண்டாம், இல்லன்னா பாக்ஸ் போய்விடும்’னு சொன்னேன்.
ஆனாலும், என்னை ஆடவச்சிட்டார். அனிருத் பற்றி எவ்வளவு கூறினாலும் போதாது. புகழின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒருவர், இளம் வயதிலேயே அமைதியை அல்லது தன்னையே தேடி இமயமலையை சென்றிருந்தால், அவரின் ஆளுமை என்னவென்பது புரிந்து கொள்ளலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ சிறப்பாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கைதி’ படம் வெளிவந்ததும், நான் உடனே அவருக்கு அழைத்தேன். “மற்றவர்கள் முன்பதிவு செய்யும் முன் நீங்கள் வந்து விடுங்கள்” என்றேன். அவர் வந்தபின், “எனக்கு ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “உங்களுக்கு இல்லாத கதையா? இருக்கு. சொல்றேன். நான் கமல் ஹாசன் ரசிகன்” என்றார். அதிலிருந்து அவர் சொல்பதின் நுணுக்கமான அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன் – அதாவது, punch dialogue இல்லாமல், புத்திசாலித்தனமாக நடிக்க வேண்டும் என்பதைக் கூறினார். பின்னர் அவர் ஒரு கதை கூறினார் – அது முழுக்க வில்லன் கேரக்டர்.
அந்த கேரக்டருக்கு நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஏனெனில் வில்லனாக இருந்தால் சிரித்துக்கொண்டே அடிக்கலாம், பேசிக்கொண்டே தாக்கலாம். ஒன்பது மாதங்களுக்கு பிறகு அவர் திரும்ப வந்து, “அதற்கு நிறைய நடிகர்கள் தேவை, வேறு ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். அதற்கும் நான் ஒப்புக்கொண்டேன்.
அதுவே ‘கூலி’. ஆரம்பத்தில் இதற்குப் ‘தேவா’ என தலைப்பு வைத்திருந்தனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பார் என கூறியபோது, “அவரிடம் கேட்டீர்களா?” என நான் கேட்டேன். “அவர் நடிப்பதாக ஏற்கனவே சொன்னார், ஆனால் ரஜினி சாரிடம் சொல்லுங்கள் என்றார்” எனத் தெரிவித்தார்கள். “’சிவாஜி’ படத்தில் அவரை நடிக்கச் சொல்லி, நான் என்ன சம்பளம் வாங்குகிறேனோ அதே அளவு கொடுப்பதாக கூறியும் அவர் மறுத்தார். இப்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டதே மிகப்பெரிய விஷயம்” எனச் சொன்னேன்.
சத்யராஜுக்கும் எனக்கும் கருத்துப் பாகுபாடு இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் எந்த எதிர்ப்பும் இல்லை. மனதில் என்ன இருக்கிறதோ அதை நேரடியாகச் சொல்லக்கூடியவர்களை நம்பலாம். ஆனால் உள்ளே ஒன்று வைத்துக்கொண்டு வெளியே வேறு ஒன்றாக நடந்துகொள்பவர்களை நம்ப முடியாது. ‘கூலி’ எனக்கு மனதுக்குப் பிடித்த படம். என் அண்ணன், என்னை படிக்க வைக்கவேண்டும் என்ற பெரிய ஆசையுடன் இருந்தார். படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறுவார்.
என் தந்தை, “இவனை ஏன் படிக்க வைக்கிறாய்?” எனக் கேட்டார். அன்று காலத்தில் தேர்வு கட்டணம் ரூ.120. அதற்காக நான் கட்டணம் செலுத்தாமல், அந்தப் பணத்தைக் கொண்டு மெட்ராஸ் ஓடிவந்தேன். சினிமாவில் லைட்மேன் வேலையை முயற்சி செய்தேன் – கிடைக்கவில்லை. ஓட்டலில் சர்வர் வேலை கிடைக்குமா என பார்த்தேன் – அதுவும் இல்லை. பணம் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பினேன். கண்டிப்பாக திட்டபடுவேன் என நினைத்தேன். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை.
அன்னே சொன்னார், “நாளையிலிருந்து நீ கூலியாக மூட்டை தூக்கவேண்டும்” என்று. வேறு வழியின்றி நான் ஒத்துக்கொண்டேன். அரிசி மூட்டை இறக்கவேண்டும். ஒரு மூட்டை இறக்கியால் பத்து பைசா கிடைக்கும். ஒரு நாள், மாமா ஒரு மூட்டை எடுத்து ஒரு இடத்திற்கு கொண்டு செல்லச் சொன்னார்.
அதை கொடுத்து திரும்பும்போது அந்த வீட்டில் இருந்தவர் எனக்கு ரூ.2 டிப்ஸ் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னார். அது என் கல்லூரி நண்பன் மனுசாமி. படிக்கும் போது அவனை மிகவும் கிண்டல் செய்திருந்தேன். அவன் என்னைப் பார்த்து, “என்னடா ஆட்டம்?” என்றான்.
அப்போதே, என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் அழுதேன். பிறகு சினிமாவிற்கு வந்தேன். இயக்குநர் கே. பாலசந்தர் சார், பெங்களூரில் இருந்த இந்த செடியை தமிழ்நாட்டில் நாட்டினார். அதை வளர்த்து, பஞ்சு அருணாச்சலம் மற்றும் முத்துராமன் ஆகியோர் தங்களது கைகளில் ஒப்படைத்தார்கள். அவர்கள் அதை மரமாக வளர்த்தனர். இந்த மரம் வீழ்ந்தபோதெல்லாம் ரசிகர்கள் எனும் நீங்கள்தான் அதை பிடித்துக் கொண்டீர்கள். அதற்காக உங்களது கால்களுக்கு வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவன் அனைவரிடமும் பேசுவார். உங்கள் காதுகளில் மெதுவாக, “என்ன செய்ய வேண்டும், என்ன தவிர்க்க வேண்டும்” என கூறுவார். ஆனால், அதனுடன் உங்கள் சுயக் குரலும் பேசும். இதில் இறைவனின் குரல் எது, உங்கள் மனக்குரல் எது என்பதை உங்களால் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் குரல் ‘நீ மட்டும் அல்ல, பிறரும் நலமாக இருக்க வேண்டும்’ என சொல்வது.
எவ்வளவு பணம், புகழ் வந்தாலும் வீட்டில் அமைதி இல்லையெனில், வெளியே மரியாதை இல்லையெனில் அது எந்த பயன்பாடும் இல்லை. நான் முடிந்தவரை இறைவனின் குரலைக் கேட்டு நடந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் நானும் நலமாக இருக்கிறேன், என்னைச் சுற்றி இருப்போரும் நலமாக இருக்கிறார்கள்” என்றார் ரஜினிகாந்த். விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.