பிஹார் SIR விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு சம்மதிக்க வேண்டும்: பிரியங்கா காந்தி
பிஹாரில் வாக்காளர் பட்டியலுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தைப் பற்றிய விவாதம் நடத்தவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மக்களவை இன்று காலை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை அரசாங்கம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 11வது நாளான இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டம் தொடங்கியது. ஆரம்ப நிகழ்ச்சியாக கேள்வி நேரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை எதிர்த்து, பிஹார் வாக்காளர் பட்டியல் SIR திருத்தம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கான அனுமதியை மறுத்ததால், அவையில் கோஷங்கள் எழுந்து அமளி ஏற்பட்டது. இதனால் கூட்டம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி வத்ரா, “இது (Bihar SIR) மிகவும் முக்கியமான விஷயம். இது நேரடியாக வாக்காளர் பட்டியலைச் சார்ந்தது. எனவே, இந்த விவகாரத்தை எங்களால் எழுப்ப இயலாது என ஏன் சொல்லப்படுகிறது? அரசு இதைப் பற்றி விவாதிக்க சம்மதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும்” என கூறினார்.
முன்னதாக, பிஹார் SIR விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் தேவைப்படுவதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த தீர்மானத்தில், “SIR நடவடிக்கை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தீங்கான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்களின் வாக்குரிமையை இழந்துள்ளனர். இவ்வாறான இலக்குக் கொண்ட வாக்குரிமை நீக்கம், அடுத்து அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.
இந்த செயல்முறை சட்டப்பூர்வமானதா என்பது குறித்து மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விவாதம் அவையில் நடைபெற வேண்டும். இது, இந்திய அரசியலமைப்பில் உள்ள வாக்களிக்கும்பட்ட உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறது. நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல்களின் நடத்தையை இது பாதிக்கக்கூடிய சூழல் உருவாக்கியுள்ளது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.