சிதம்பரம் நடராஜர் கோயிலில் 14 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தமிழர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
சிதம்பரம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயிலை, 14 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தமிழர்கள் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, கனடா, மியான்மர், இலங்கை, ஃபிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட வெளிநாட்டு தமிழர்கள் குழுவினர், இன்று (ஆகஸ்ட் 4) காலை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மூன்று பேருந்துகளில் சிதம்பரத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடராஜர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். அங்கு, கோயிலின் கட்டிட கலை மற்றும் சிற்பங்களைப் பார்த்து வியப்புடன் நீண்ட நேரம் காண்கின்றனர்.
அதன்பின்னர், தேவாரம் மற்றும் திருவாசகம் உலகிற்கு வழங்கப்பட்ட புனித இடங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்து, அங்குள்ள தங்கக் கோபுரம் பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர்.
அதையடுத்து, கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி மற்றும் முக்குருணி விநாயகர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலின் நான்கு கோபுரங்களையும் பார்வையிட்டு ரசித்தனர். பின்னர், அவர்கள் கும்பகோணத்தருகே உள்ள நாதஸ்வரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிடச் சென்றனர். தொடர்ந்து தாராசுரம் கோயிலையும் பார்வையிட சென்றனர்.
இந்த பயணத்தில் மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் கண்ணன், வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையத்துக்குட்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ‘வேர்களைத் தேடி’ எனப்படும் இந்த பயணம், வெளிநாட்டு தமிழர்கள் தமிழகத்தின் பண்பாடு, கட்டிடக் கலையைப் பற்றிய விழிப்புணர்வை பெறவும், நீர்நிலைகள், பண்டைய கோயில்கள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அறியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சுற்றுப்பயணம், ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது.