அணு ஆயுதங்களைப் பற்றி பேசும் போது மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்: ரஷ்யாவின் வலியுறுத்தல்

அணு ஆயுதங்களைப்பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனக் கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள், அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளுக்கிடையிலான நேரடி போராக மாறக்கூடும் என முன்னாள் ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை தேவையான இடங்களுக்கு நகர்த்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில், ரஷ்ய அரசின் நிலைப்பாட்டை விளக்கிய திமித்ரி பெஸ்கோவ், “அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இது தொடர்ச்சியான செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இதுதான் முதலில் கவனிக்க வேண்டிய அம்சம்.

எங்களுக்கு இந்த விவாதங்களில் ஈடுபட விருப்பமில்லை. எனவே, இதுபற்றி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அணு ஆயுதங்களைப் பற்றி பேசும் போது மிகுந்த பொறுப்புடன், மிகுந்த கவனத்துடன் பேச வேண்டியது எல்லோருக்கும் புரிந்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.

ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் பன்னாட்டு பதற்றத்தை அதிகரித்துள்ளதா என்பது தொடர்பாகக் கேட்கப்பட்டதற்கு, “நாங்கள் பதற்றம் குறித்த எதையும் இப்போது கூற விரும்பவில்லை. ஆனால், இது மிகவும் நுட்பமான, அதிகமான அழுத்தத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை உள்ளடக்கியது என்பது உண்மைதான். பலர் இதைப் பற்றித் தீவிர உணர்ச்சிகளுடன் பேசுகிறார்கள்” எனத் திமித்ரி பெஸ்கோவ் விளக்கினார்.

மேலும், மெத்வதேவ் வெளியிட்ட கருத்துக்கு கிரம்ளின் எச்சரிக்கை விடுத்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, “ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் தலைவர்கள் நிகழ்வுகளைப் பல்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள். வெவ்வேறு அணுகுமுறைகளும் இருக்கின்றன. மிகவும் கடுமையான மனநிலையுடையவர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ளனர். இது எப்போதும் நடந்தே வரும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், ரஷ்யாவின் வெளிவிவகாரக் கொள்கையை இறுதியாகத் தீர்மானிக்கிறவர் அதிபர் புதினே என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

Facebook Comments Box