“எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்க வேண்டுமா?” – தேசிய விருதுக் குழுவின் முடிவை நடிகை ஊர்வசி கண்டனம் செய்தார்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ஊர்வசி தேசிய விருதுக் குழுவின் தேர்வுகள் குறித்து வெளிப்படையான கண்டனம் தெரிவித்துள்ளார். “எதை கொடுத்தாலும் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைக்கக் கூடாது” என அவர் கூர்ந்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளில், ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதும், அதில் நடித்த எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருதும், ஜி.வி. பிரகாஷுக்கு (வாத்தி) சிறந்த இசையமைப்பாளர் விருதும், ராம் குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த கதை வசனம் விருதும் அறிவிக்கப்பட்டது.

இதே நேரத்தில், மலையாளம் திரைப்படமான ‘ஆடுஜீவிதம்’ எந்தவொரு விருதையும் பெறாமல் இருப்பது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனுடன், ‘உள்ளொழுக்கு’ படத்துக்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து வெளியான ஒரு பேட்டியில், ஊர்வசி கூறியதாவது:

‘ஆடுஜீவிதம்’ போல் ஒரு திரைப்படத்தை எப்படி புறக்கணிக்க முடிகிறது? நஜீபின் வாழ்க்கை, அவரது வேதனைகள், அனைத்தையும் மிகவும் உணர்வாக, உடல் மாற்றங்களுடன், ஒரு நடிகர் (பிரித்விராஜ்) வாழ்ந்துள்ளார். இந்த புறக்கணிப்புக்கு ‘எம்புரான்’ திரைப்படம் தான் காரணம் என அனைவருக்கும் தெரியும். விருதுகள் அரசியலாக்கப்படக் கூடாது.”

அதே பேட்டியில், துணை நடிகை விருது பெற்றதிலும் சந்தேகம் எழுப்பிய அவர், தன்னை ஒரு முன்னணி கதாபாத்திர நடிகையாகவே அந்த படத்தில் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்:

துணை வேடத்துக்கான விருதை, பிரதான கதாபாத்திரத்திற்கே வழங்கினால், உண்மையான துணை நடிகர்கள் எங்கே போவார்கள்? அவர்களுக்கு என்ன உந்துதல் இருக்கிறது? நடிப்பின் அளவை வைத்து இந்த முடிவுகள் எடுக்கப்படுகிறதா? 2005-ல் ‘அச்சுவிண்டே அம்மா’க்கு நான் பெற்றதுபோல் மீண்டும் இப்போது எனக்கேவேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் இப்போது நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

“இது எனக்காக மட்டும் அல்ல, என்னைத் தொடர்ந்து வரும் இளைய நடிகர்களுக்காகவும். தெற்கில் திறமையான நடிகர்கள் நிறைய இருக்கிறார்கள். இப்போது நாங்கள் பேசவில்லை என்றால், இவர்கள் அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.”

“விருதுகள் திறமைக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு காரணங்களுக்காக அல்ல. எனக்கு விருதுகள் மீது ஆசை இல்லை. ஆனால் அவை கிடைக்கும் போது அது மகிழ்ச்சி தரவேண்டும். இப்படி பதற்றத்தைத் தரக்கூடாது.”

தேசிய விருது நடுவர் குழுவின் செயல்பாடுகள் தெற்கை இலகுவாக எடுத்துக் கொள்வது போல இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார்:

“நடுவர் குழுவினர் எதை கொடுத்தாலும் நாம் அமைதியாக வாங்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கக் கூடாது. நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவரல்ல. நான் வரி செலுத்துகிற குடியுரிமையாளன். எனக்கு பயமே இல்லை. என் பின்னால் வருபவர்கள் எதற்கும் பயப்படாமல் கேட்க வேண்டுமென்பதற்காகவே நான் பேசுகிறேன். ‘ஊர்வசி கூட அமைதியாக இருந்தார்’ என்று எதிர்காலத்தில் யாரும் சொல்ல வேண்டாம்.”

“இங்கே அதிகம் கல்வியறிவு இருக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் நிறைந்துள்ளார்கள். அதனால்தான் நாங்கள் கேட்கிறோம். பின்விளைவுகள் இருக்கும். பரவாயில்லை. யாராவது பூனைக்கு மணி கட்ட வேண்டும், அதனைத்தான் இப்போது செய்கிறேன்” என நடிகை ஊர்வசி தனது வலியுருத்தலை உறுதியாக பதிவு செய்துள்ளார்.

Facebook Comments Box