உத்தராகண்ட் மேக வெடிப்பு: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகள் மற்றும் விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 150-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் அதற்காக பணியாற்றி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீர் கங்கா ஆற்றின் மேல்நிலைக் பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பே இந்த பெரும் வெள்ளத்திற்கு காரணமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயற்கை பேரழிவில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், மாநிலத்துக்குத் தேவையான எல்லா உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
150 வீரர்கள் மீட்பு பணியில்:
தாராலி கிராமத்தில் இன்று மதியம் 1.45 மணியளவில் மேக வெடிப்பால் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹர்சிலில் உள்ள ராணுவ முகாமில் இருந்து சுமார் 150 ராணுவ வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாராலி கிராமத்திற்கு பத்து நிமிடங்களில் சென்றனர். அவர்கள் தற்போது அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என ராணுவத் தளபதி மந்தீப் தில்லியன் தெரிவித்துள்ளார்.
“இந்நேரம் வரை 40 முதல் 50 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 50 பேரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இது முதற்கட்ட தகவல்களாகும். சம்பவம் மதியம் சுமார் 2 மணியளவில் நடந்தது. NDRF படையின் மூன்று குழுக்கள் அவசரமாக துயர பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 35 பேர் உள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பார்கள். மிகுந்த அளவில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன” என பேரிடர் மேலாண்மை அதிகாரி டிஐஜி மொஹ்சென் ஷாஹேதி கூறியுள்ளார்.
மேலும், ரிஷிகேஷில் உள்ள எயிம்ஸ் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தகவல் தொடர்பு அதிகாரி சந்தீப் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
2013-ம் ஆண்டு உத்தராகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வைவிட இந்த முறை பாதிப்பு மிகுந்ததாக தெஹ்ரி கர்வால் மக்களவை உறுப்பினர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் நில அதிர்வுகள் காரணமாக அப்பகுதியும் அபாயத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.