பாஜக கூட்டணியில் அமமுக பங்கேற்பது குறித்து பாஜக மத்திய தலைமை முடிவு…. எல்.முருகன் அதிரடி…!

0
அமமுக  தனித்து போட்டியிடுவோம் என எங்கும் அறிவிக்கவில்லை எனவும், பாஜக கூட்டணியில் அமமுக பங்கேற்பது குறித்து பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் எனவும் எல்.முருகன் கூறியுள்ளார். 
சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எந்தெந்த இடங்களில் எப்படி பணி செய்ய வேண்டும் என இன்று  ஆலோசித்தோம். அதிமுகவுடன்  தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். பாஜக எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது பேச்சுவார்த்தையின் போது தான் முடிவாகும் என்றார். 
புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம்,  பாஜகவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற எல். முருகன்,சசிகலா அதிமுக இடையேயான விவகாரம் அவர்களது உட்கட்சி பிரச்சனை, அமமுக தனித்து போட்டியிடுவோம் என எங்கும் குறிப்பிடவில்லை, பாஜக கூட்டணியில் அமமுக இடம் பெறுவது குறித்து பாஜகவின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்றார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது என்றார்.