இந்தியாவிற்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது

இந்தியாவுக்கு அமெரிக்கா செலுத்தும் வர்த்தக அழுத்தத்தை நியாயமானது என எங்களால் ஏற்க முடியாது என்று ரஷ்ய அதிபர் அலுவலகத்தின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்றரை ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்புகளை சமன் செய்யும் நோக்கில், ரஷ்யா தனது கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருகிறது.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் கூடுதல் எண்ணெய் வாங்கும் சூழ்நிலையால், உலக சந்தையில் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தவும், நாட்டுக்குள் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை அதிகரிக்காமல் தடுக்கவும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. தற்போது, இந்தியாவின் எண்ணெய் தேவைப்பட்ட அளவில் சுமார் 40% அளவை ரஷ்யா வழங்குகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிற பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சமீபத்தில் எச்சரிக்கை வெளியிட்டார்.

இதைக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ரஷ்ய அரசு பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ், “அமெரிக்கா பல நாடுகளை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று அழுத்துகிறது என்ற தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. இது உண்மையில் ஒரு அச்சுறுத்தலாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என எங்களால் கருத முடியாது. தங்களது வர்த்தக கூட்டாளிகளை நாடுகள் சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு” என்று கூறினார்.

அதே நேரத்தில், ஆகஸ்ட் 7க்குள் ரஷ்யா போரை முடிக்க வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் அவகாசம் அளித்திருந்தாலும், அதைப்பற்றி எவ்விதத் திருப்பமும் இல்லாமல், தங்களது நிலைப்பாட்டை தொடருவோம் என விளாதிமிர் புதின் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box