பிப்ரவரியில் அறிமுகமான வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டது; ஆகஸ்ட் 11-ல் புதிய மசோதா வரவுள்ளது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஆகஸ்ட் 8) மக்களவையில், 2025 ஆம் ஆண்டிற்கான வருமான வரி மசோதாவை வாபஸ் பெற்றார். தேர்வுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் சேர்த்து, புதிய மசோதாவை விரைவில் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக் குழு, கடந்த பிப்ரவரி 13 அன்று மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதாவில் பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்தது. 4,500 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், மொத்தம் 285 பரிந்துரைகளை குழு வழங்கியுள்ளது. இப்பரிந்துரைகள் இணைக்கப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மசோதாவின் பல பதிப்புகள் உருவாகி குழப்பம் ஏற்படாமல், அனைத்து திருத்தங்களும் இணைக்கப்பட்ட தெளிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வழங்கும் நோக்கில், புதிய மசோதா மக்களவையில் பரிசீலனைக்கு முன்வைக்கப்படுகிறது.
புதிய வருமான வரி சட்டத்தில், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடாத நன்கொடைகளுக்கு வரி விலக்கு தொடர வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், வரி செலுத்துவோர், வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டிய நாளைத் தாண்டியும், எந்த அபராதத் தொகையும் செலுத்தாமல், மூலத்தில் கழிக்கப்பட்ட வரியை (TDS) திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மசோதாவை எளிதாக்கி, பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டும் எனவும் குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.